ஹூப்ளியில் அஞ்சலி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி, பெண்களிடம் சில்மிஷம் செய்த போது அடி உதை தாங்காமல் ரயிலில் இருந்து குதித்ததில் படுகாயமடைந்துள்ளார்.
கர்நாடகா மாநிலம், ஹூப்ளியில் உள்ள வீராப்பூர் ஓனியைச் சேர்ந்தவர் அஞ்சலி அம்பிகேரா(20). இவரை கிரீஷ் சாவந்த் என்ற வாலிபர் வீடு புகுந்து குத்திக்கொலை செய்தார். மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில், குற்றவாளியான கிரீஷ் சாவந்த் தலைமறைவானார்.
அவரைப் பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டன. இந்த நிலையில், படுகாயங்களுடன் கிரீஷ் சாவந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்த ஹூப்ளி போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போது, மைசூரில் இருந்து ஹூப்ளிக்கு ரயிலில் கிரீஷ் சாவந்த் சென்றுள்ளார். அப்போது ரயில் பெண் பயணிகளிடம் அவர் தவறாக நடந்து கொண்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் அவரை அடித்து உதைத்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து கிரீஷ் கீழே குதித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை தாவண்கெரே போலீஸார் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அஞ்சலியைக் கொலை செய்த குற்றவாளி அவர் தான் என்பதை அறிந்த போலீஸார், கிரீஷை கைது செய்தனர்.
இதையடுத்து ஹூப்ளி போலீஸாருக்கு அவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். அவரை கைது செய்த ஹூப்ளி போலீஸார், கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஹூப்ளி தார்வாட் காவல் துறை ஆணையர் ரேணுகா சுகுமார், கிம்ஸ் மருத்துவமனைக்கு வந்து கிரீஷிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
கொலையாளி கிரீஷ் எங்கிருந்தார் என்பதற்கு காவல் துறை கூறிய தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் அளித்த தகவலின்படி," மைசூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கிரீஷ் வேலை செய்து வந்துள்ளார். அப்போது கிரீஷிம், அஞ்சலியும் காதலித்து வந்தனர்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோயிலில் அவர்கள் திருமணம் நடந்தது. ஒரு வாரத்திற்கு முன்பு கிரீஷிடம் 2 ஆயிரம் ரூபாயை அஞ்சலி கேட்டுள்ளார். அவர் கேட்ட பணத்தை கூகுள்பே மூலம் கிரீஷ் அனுப்பியுள்ளார். அதன்பிறகு கீரிஷின் தொலைபேசி எண்ணை அவர் பிளாக் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்து மைசூரில் இருந்து ஹூப்ளி வந்த கிரீஷ் சாவ்ந்த், வீடு புகுந்து அஞ்சலியை குத்திக் கொலை செய்தார்" என்று போலீஸார் கூறினர்.
மேலும் " இந்த கொலைக்குப் பின், கிரிஷ் ஹூப்ளி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஹாவேரிக்கு வந்தார். அங்கிருந்து மைசூரு சென்றுள்ளார். இதன் பின் மீண்டும் மைசூரில் இருந்து ஹூப்ளிக்கு ரயிலில் வரும் போது தான் பெண் பயணிகளிடம் பிரச்சினை ஏற்பட்டு ரயிலில் இருந்து வெளியே குதித்துள்ளார். அவர் எதற்காக ரயிலில் இருந்து குதித்தார் என்பதற்கான பதிலை அவர் தான் சொல்ல வேண்டும்.
மைசூரில் இருந்து கோவா, மகாராஷ்டிராவுக்கு சென்று தலைமறைவாக திட்டமிட்டிருந்தார். கிரிஷ் மீது 4 பைக் திருட்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் கூறியபடி, ’அந்த பெண் போனை பிளாக் செய்துள்ளார். நாங்கள் காதலிக்கிறோம்’ என்று கூறினார். சுயநினைவுக்கு வந்த பிறகே முழுமையான அறிக்கை அவரிடமிருந்து பெறப்படும்'' என்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்!
மீண்டும் சர்ச்சையில் டிடிஎப் வாசன்... கார் ஓட்டி அட்ராசிட்டி!