மீண்டும் சர்ச்சையில் டிடிஎப் வாசன்... ஓட்டுநர் உரிமம் ரத்தான போதும் கார் ஓட்டி அட்ராசிட்டி!

By காமதேனு

யூடியூபர் டிடிஎப் வாசன், ஓட்டுநர் உரிமம் ரத்தான பின்னர், தற்போது கார் ஓட்டுவது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமூக வலைதளங்களில் பிரபலமானவராக வலம் வரும் டிடிஎப் வாசன், இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களுக்கு இருசக்கர வாகனத்தில் பயணித்து வீடியோக்களை வெளியிட்டு பார்வையாளர்களிடையே பிரபலமானார். அதிவேகமாக பைக்குகளை ஓட்டுவது, அதில் வீலிங் உள்ளிட்ட சாகசங்களை செய்வது தொடர்பான வீடியோக்களை அவர் பதிவேற்றியதால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வந்தனர். கோவை மாவட்டம் காரமடை பகுதியைச் சேர்ந்த இவர் வெளியிட்ட வீடியோக்களை பார்த்து பலரும் சூப்பர் பைக்குகள் என்று அழைக்கப்படும் அதிவேக பைக்குகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வந்தனர்.

இதனால் ஏராளமான விபத்துகள் நடைபெற்று வருவதாக அவர் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இந்நிலையில் சென்னையிலிருந்து மகாராஷ்டிராவிற்கு செல்ல முயன்ற டிடிஎப் வாசன், கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காஞ்சிபுரம் அருகே நெடுஞ்சாலையில் வீலிங் செய்ய முயற்சித்த போது விபத்தில் சிக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். சுமார் 6 மாத காலத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு, பின்னர் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

டிடிஎப் வாசன்

நீதிமன்ற உத்தரவுப்படி அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. சிறையில் இருந்து வெளிவந்த போதும், இருசக்கர வாகனங்களை ஓட்டாமல் நண்பர்களுடன் பயணித்து வந்த அவர், அவ்வப்போது சைக்கிள் ஓட்டுவது போன்ற வீடியோக்களை தனது யூடியூப் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அவருக்கு கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள அவர், கார் ஓட்டுவது போன்ற காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது. இதைப் பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்ததோடு, லைசன்ஸ் இல்லாமல் எப்படி கார் ஓட்ட முடியும் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

டிடிஎப் வாசன்

இருப்பினும் ஒரு வீடியோவில், தான் கார் ஓட்ட லைசன்ஸ் வாங்கி விட்டதாக அவர் தெரிவித்துள்ளதால், பலரும் குழப்பம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் எனவும் முறைகேடு அல்லது மோசடியில் ஈடுபட்டிருந்தால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேசமயம் அவரது ரசிகர்கள் பலரும் மீண்டும் அவர் வாகனம் ஓட்ட தொடங்கி இருப்பதை வரவேற்கும் வகையில் தங்களது சமூக வலைதள பக்கங்களில் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE