கடமை தவறிய இன்ஸ்பெக்டர், பெண் காவலர் சஸ்பெண்ட்... இளம்பெண் கொலை வழக்கில் பரபரப்பு!

By காமதேனு

ஒருதலைக் காதலால் இளம்பெண் வீடு புகுந்து இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர், பெண் காவலர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலம், ஹூப்ளி ஒருதலைக் காதல் படுகொலைகள் அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தன்னுடன் படித்த நேஹா என்ற மாணவியை ஃபயாஸ் என்ற மாணவன் குத்திக் கொலை செய்தார். மாநிலம் முழுவதும் இக்கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அக்கொலையில் சுவடு மறைவதற்கு முன்பு ஹூப்ளியில் அதே போன்ற கொடூரக்கொலை நேற்று நடைபெற்றது மக்களிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட அஞ்சலி, கொலை செய்த கிரீஷ்.

கர்நாடகா மாநிலம், ஹூப்ளியில் உள்ள வீராப்பூர் ஓனியைச் சேர்ந்தவர் அஞ்சலி அம்பிகேரா(20). இவரை கிரீஷ் என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்தார். அத்துடன் அஞ்சலிக்கு அவர் கொலைமிரட்டலும் விடுத்து வந்தார்.

இதுதொடர்பாக அஞ்சலியின் பாட்டி கங்கம்மா, காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், நேற்று அதிகாலை வீரபுர ஓனியில் உள்ள அஞ்சலியின் வீட்டிற்குள் புகுந்த கிரீஷ், கத்தியால் அவரைக் குத்திக் கொலை செய்தார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

காவல் நிலையத்தில் ஏற்கெனவே புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காததால் தான் அஞ்சலி கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர்கள் குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அஞ்சலி கொலை வழக்கில் கடமை தவறியதாக ஹூப்பள்ளி பெண்டிகேரி காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் பெண் காவலர் ரேகா ஆகியோரை சஸ்பெண்ட் செய்து ஹூப்பள்ளி தர்வாட் காவல் ஆணையர் ரேணுகா சுகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சசி, அஞ்சலி, கிரீஷ்

இந்த நிலையில், தன் நண்பனைப் பார்த்து தான், அஞ்சலியை கிரீஷ் கொலை செய்ததாக தற்போது தெரிய வந்ததுள்ளது. அஞ்சலி கொலை செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஹூப்ளி தாலுகாவில் உள்ள ஹலயாலாவில் சதாம் என்ற இளைஞன் கொலை செய்யப்பட்டார்.

இக்கொலை வழக்கில் சசி என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர், அஞ்சலியை கொலை செய்த கிரீஷின் நண்பராவார். இவர்கள் இருவர் மீதும் பைக் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் கூறுகின்றனர். தனது நண்பன் சசி கொலை செய்ததைப் பார்த்து ஊக்கம் பெற்று அஞ்சலியை வீடு புகுந்து கிரீஷ் குத்திக் கொலை செய்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE