பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவதூறாக பேசியதாக புகார்... சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்ட் மீது புதிய வழக்கு!

By காமதேனு

பசும்பொன் முத்துராமலிங்க தேவரை இழிவுபடுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டதாக வழக்கறிஞர் அளித்த புகாரின் பேரில், யூடியூபர் சவுக்கு சங்கர் மற்றும் யூடியூப் சேனல் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்ட் ஆகியோர் மீது கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண் காவலர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சங்கரை கடந்த 5-ம் தேதி, தேனியில் வைத்து கோவை போலீஸார் கைது செய்தனர்.

இதே புகாரில் திருச்சியில் பதிவு செய்யப்பட்ட வழக்குத் தொடர்பாக ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டை போலீஸார், டெல்லியில் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்துள்ளனர்.

சவுக்கு சங்கர்

இந்த நிலையில் சவுக்கு சங்கர் மீது சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெண்களை இழிவுபடுத்திய வழக்கும், வாகனத்தில் கஞ்சா வைத்திருந்ததாக தேனியில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கோவை சிறையில் இருந்து போலீஸார் பாதுகாப்புடன் இன்று அதிகாலை அவரை திருச்சி அழைத்து சென்றனர். திருச்சியில் உள்ள கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையம்

இதனிடையே, கடந்த 31.10.2023 அன்று ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலில் சவுக்கு சங்கர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பற்றிஅவதூறு பரப்பி இழிவுபடுத்தும் வகையில் பேட்டி கொடுத்ததாக கூறப்படுகிறது. இரு பிரிவினரிடையே கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக நேதாஜி பேரவையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்து என்பவர் கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதன் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீஸார், 5 சட்டப்பிரிவுகளில் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்ட் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE