பெற்றோர்களே உஷார்... விளையாட்டு வினையானது; தூக்கில் தொங்கிய 3 ம் வகுப்பு மாணவி

By காமதேனு

மின் விசிறியில் சேலையை போட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி எதிர்பாராத விதமாக கழுத்து இறுகி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட நந்தீஸ்வரர் காலனி 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பிரபு. இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ஹன்சிகா( 9). நந்திவரம் அரசு ஆரம்ப பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று மதியம் ஹன்சிகா வீட்டில் தனது தங்கையுடன் விளையாடிக் கொண்டிருந்தார். இப்போது திடீரென தங்கை கூச்சலிட்டு அழும் சத்தம் கேட்டது. அதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து பார்த்தபோது ஹன்சிகா கட்டில் மீது பிளாஸ்டிக் நாற்காலி போட்டு அதன் மீது ஏறி மின் விசிறியில் துப்பட்டா துணியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இதை பார்த்ததும் பதறிய உறவினர்கள் ஹன்சிகாவை மீட்டு கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்

இது குறித்து தகவலறிந்து வந்த கூடுவாஞ்சேரி போலீஸார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த சிறுமி ஹன்சிகா விளையாட்டாக மின்விசிறியில் துப்பட்டாவை மாட்டி தனது தங்கையுடன் விளையாடி கொண்டிருந்தபோது கழுத்தில் துப்பட்டா இறுகியதால் உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE