பகீர்... ஓடும் பைக்கில் தீக்குளித்த காதலர்கள்!

By காமதேனு

மயிலாடுதுறையில் காதலன் வேறொரு பெண்ணுடன் பழகியதால் ஆத்திரமடைந்த காதலி, பைக்கில் இருவரும் சென்று கொண்டிருந்த போது, தன் மீதும், காதலன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினர் விசாரணை

மயிலாடுதுறை நகரம் தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் ஆகாஷ்(24). பூம்புகார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் மயிலாடுதுறை அரசினர் மகளிர் கல்லூரியில் பி.ஏ., இரண்டாம் ஆண்டு பொருளாதாரம் படிக்கும் கடலூர் மாவட்டம் புவனகிரி கச்ச பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த நாகப்பன் மகள் சிந்துஜாவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இதனிடையே, ஆகாஷ் வேறு ஒரு பெண்ணுடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆகாஷ்-சிந்துஜா இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இருவரும் இருசக்கர வாகனத்தில் பூம்புகார் கடற்கரைக்கு சென்றுள்ளனர். மாலை 5.45 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு மயிலாடுதுறைக்கு திரும்பியுள்ளனர்.

அப்போது, ஆகாஷ் பழகி வரும் பெண்ணுடன் இனி எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று சிந்துஜா கண்டித்துள்ளார். இதற்கு ஆகாஷ் ஒத்துக் கொள்ளவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த சிந்துஜா, விசித்திராயர் தெருவில் இருசக்கர வாகனம் சென்று கொண்டிருந்த போதே பாட்டிலில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து இருவர் மீதும் ஊற்றி தீ வைத்தார்.

இதனால் இருவரின் உடலின் மீதும், இரு சக்கர வாகனத்தின் மீதும் பெட்ரோல் பரவி தீப்பிடித்து எறிந்தது. இதைப் பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று தீயை அணைத்து இருவரையும் காப்பாற்றினர். இதில் படுகாயம் அடைந்த இருவரையும் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸார் இருவரிடமும் விசாரணை நடத்தினர்.

தீக்காயம் அதிகமாக இருந்த நிலையில் இருவரும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பட்டப்பகலில் நடுசாலையில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE