குஜராத்தில் நீட் தேர்வு முறைகேடு: பள்ளி ஆசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்கு!

By காமதேனு

குஜராத்தில் நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட ஆசிரியர் உள்பட 3 பேர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ கல்வி நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிலையில் இந்தத் தேர்வில் குஜராத் மாநிலத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அங்குள்ள பஞ்ச்மஹால் மாவட்டம், கோத்ராவில் ஒரு பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் மோசடி நிகழ்ந்தது கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த தகவலின் பேரில் இந்த மோசடி கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணையில் தேர்வு மையத்தில் துணை கண்காணிப்பாளராக இருந்த துஷார் பட் என்ற இயற்பியல் ஆசிரியர் மற்றும் பர்சுராம் ராய், ஆரிப் வோரா ஆகிய இருவர் சிக்கினர்.

நீட் தேர்வு

இவர்கள் நீட் தேர்வு எழுதிய சில மாணவர்களிடம் ரூ.10 லட்சம் பேரம் பேசி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி, நீட் தேர்வர்களுக்கு விடை தெரியாத கேள்விகளை வெறுமையாக விடுமாறும், தேர்வு முடிந்த பின்னர், அவற்றை பூர்த்தி செய்து கொள்ளலாம் எனவும் கூறி முறைகேட்டுக்கு திட்டமிட்டனர்.

இந்நிலையில் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்பேரில் அனைவரும் பிடிபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து ஆசிரியர் துஷார் பட் காரில் நடத்திய சோதனையில் ரூ.7 லட்சம் ரொக்கம் இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணம் நீட் தேர்வு எழுதிய ஒரு மாணவர், துஷார் பட்டுக்கு முன் பணமாக வழங்கியது என்பது தெரியவந்தது.

இதையடுத்து மாவட்ட கூடுதல் ஆட்சியர், மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட குழுவினர் தேர்வு நாளன்று பள்ளிக்கு வந்து துஷார் பத்திடம் விசாரணை நடத்தினர்.

நீட் தேர்வு முறைகேடு

அவரது செல்போனை சோதனையிட்டபோது, அதில் 16 பேரின் பெயர்கள், தேர்வு மையங்கள் அடங்கிய பட்டியலை அவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு மற்றொரு குற்றவாளி பரசுராம் ராய் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் இந்த முறைகேடு தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி அளித்த புகாரின் பேரில் கோத்ரா தாலுகா காவல் நிலையத்தில் துஷார் பட், பர்சுராம் ராய், ஆரிப் வோரா ஆகிய 3 பேர் மீதும் போலீஸார் நேற்று இரவு குற்றவியல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE