கோடை விடுமுறையில் சோகம்... ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

By காமதேனு

சேலம் அருகே ஒரே வகுப்பில் படித்த இரண்டு சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே மல்லிக்குட்டை பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவருடைய மகன் சுதர்சன். அதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருடைய மகன் சந்தோஷ். இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வந்தனர். தற்போது விடுமுறைக் காலம் என்பதால் நண்பர்கள் 4 பேர் சேர்ந்து நேற்று மல்லிக்குட்டை ஏரிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

கவலையுடன் காத்திருக்கும் உறவினர்கள்

அங்கு சிறுவர்கள் 4 பேரும் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சுதர்சனும், சந்தோஷும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற சிறுவர்கள் அருகில் இருப்பவர்களை உதவிக்கு அழைத்துள்ளனர். அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஏரியில் மூழ்கிய சிறுவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஓமலூர் அரசு மருத்துவமனை

ஆனால் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிறுவர்களைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர்கள் இருவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த தாரமங்கலம் போலீஸார், இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE