ரூ2.5 கோடி கொடுத்தால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்வேன்... உறுதியளித்த ராணுவ வீரர் கைது

By காமதேனு

குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்து தருவதாக வாக்குறுதி அளித்த ராணுவ வீரர் ஒருவரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் தலைவர்களில் ஒருவர் அம்பாதாஸ் தன்வே. இவரது தரப்பை அணுகிய ராணுவ வீரர் ஒருவர், குறிப்பிட்ட வேட்பாளருக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்வதாக உறுதியளித்ததோடு, அதற்காக ரூ2.5 கோடி பேரமும் பேசியிருக்கிறார். அம்பாதாஸ் தன்வே புகாரை அடுத்து, அந்த ராணுவ வீரரை மகாராஷ்டிர மாநில போலீஸார் தங்களது ரகசிய நடவடிக்கை மூலம் வளைத்து கைது செய்தனர்.

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் நகரில் ந்த சம்பவம் நடந்துள்ளது. குறிப்பிட்ட வேட்பாளருக்கு உதவுவதாகக் கூறி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சிப் மாற்றம் மூலம் முறைகேடு செய்வதாக தங்களை அணுகிய, மாருதி தக்னே என்ற ராணுவ வீரருக்கு எதிராக மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான அம்பாதாஸ் தன்வே காவல்துறையில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எல்லை காக்கும் ராணுவ வீரர்களில் ஒருவர்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்து வெற்றி பெற மத்தியில் ஆளும் பாஜக முயற்சிப்பதாகவும், அதன் அடிப்படையிலேயே 400க்கும் மேலான இடங்களில் வெற்றி என பிரச்சாரம் செய்வதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்வது நடைமுறையில் சாத்தியமில்லாதது என்று தேர்தல் ஆணையம் தரப்பில் நீதிமன்றம் வரை விளக்கம் அளித்தாகி விட்டது.

ஆனபோதும் மின்னணு எந்திரங்களுக்கு எதிரான புகார்கள் தணிந்தபாடில்லை. இந்த சூழலில் எதிர்க்கட்சி தரப்பை சேர்ந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா கட்சி பிரமுகரை சந்தித்த ராணுவ வீரர் ஒருவர், வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்வதாக ரூ2.5 கோடி பேரம் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீஸார், ’மின்னணு வாக்குப்பதிவு குறித்த அடிப்படை அறிவோ, தொழில்நுட்பத்தையோ குற்றச்சாட்டுக்கு ஆளான ராணுவ வீரர் அறிந்திருக்கவில்லை என்றும், தனது தனிப்பட்ட கடனைத் தீர்க்கும் முயற்சியில் அரசியல் கட்சி பிரமுகர்களை நாடி பணம் பறிக்க திட்டமிட்டதாகவும்’ தெரிவித்துள்ளனர்.

ஹோட்டல் ஒன்றில் வைத்து அம்பாதாஸ் தன்வேவியின் இளைய சகோதரர் ராஜேந்திர தன்வேயை நேற்றிரவு ராணுவ வீரர் மாருதி தக்னே ரகசியமாக சந்தித்தபோது அங்கே மறைந்திருந்த மாநில போலீஸார் ராணுவ வீரரை மடக்கி கைது செய்தனர். வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடுக்காக ரூ2.5 கோடியில் பேரத்தை ஆரம்பித்து, ரூ1.5 கோடியில் முடித்துள்ளார் மாருதி தக்னே.

கைது

ராஜேந்திர தன்வேவிடம் இருந்து ’அட்வான்ஸ்’ தொகையாக ரூ.1 லட்சத்தை ரணுவ வீரர் பெற்றபோது அங்கே மறைந்திருந்த போலீஸார் ராணுவ வீரரை கையும் களவுமாக கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கிராந்தி சௌக் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருக்கும் போலீஸார், இவிஎம் முறைகேடு முயற்சி வழக்கில் வேறு நபர்கள் எவருக்கேனும் தொடர்பு உள்ளதா என்று விசாரித்து வருவதாகவும் காவல்துறை ஆணையர் மனோஜ் லோஹியா தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட ராணுவ வீரர் மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள பதார்டியில் வசிப்பவர் என்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள உதம்பூரில் பணியமர்த்தப்பட்டவர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சென்னையில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழை... 4 நாட்களுக்கு வெப்பம் குறையும் என அறிவிப்பு!

பெங்களூருவில் பரபரப்பு... ரேவண்ணாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு!

உலக செஞ்சிலுவை தினம்: பேரிடர் முதல் போர் வரை... கலங்கிய மக்களுக்கு ஓடோடி உதவிய கடவுளின் தூதுவர்கள்

பெண் பத்திரிகையாளர் பரபரப்பு புகார்... சவுக்கு சங்கர் மீது சென்னையிலும் 2 வழக்குகள் பதிவு!

பரபரப்பு... உலகம் முழுவதும் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் அறிவிப்பு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE