அதிகரிக்கும் ஆபத்து... குழந்தைகளுக்கு ‘குட் டச் - பேட் டச்’ பாடம் போதாது; ‘விர்ச்சுவல் டச்’ எச்சரிக்கையும் அவசியம்

By காமதேனு

இன்றைய குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு, ’குட் டச்’, ’பேட் டச்’ குறித்து மட்டும் சொல்லித் தந்தால் போதாது, ’விர்ச்சுவல் டச்’ அபாயங்கள் குறித்தும் அவர்களுக்கு கற்றுத்தந்தாக வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

’குட் டச் - பேட் டச்’ என்ற பெயரில் தங்களை உடல் ரீதியாக அணுகுவோரின் 'நல்ல தொடுதல்' மற்றும் 'கெட்ட தொடுதல்' குறித்து எச்சரிக்கை பெற குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு கற்பிக்கும் போக்கு நிலவி வருகிறது. ஆனால் தற்போதைய தலைமுறை சிறார் இணையத்தில் உலவுவது அதிகரித்து வருவதால், அது சார்ந்த ஆபத்துகளை எச்சரிக்கும் ‘விர்ச்சுவல் டச்’ குறித்தும் அவர்களுக்கு கற்பித்தாக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளோம்.

எனவே வளர்ந்து வரும் விர்ச்சுவல் உலகின் பாதிப்புகள் மற்றும் அதன் சாத்தியமான ஆபத்துகள் குறித்து இளம் வயதினருக்கு கற்பிக்க, 'விர்ச்சுவல் டச்' என்பது பற்றியும் சொல்லித்தர வேண்டும் என, வழக்கு விசாரணை ஒன்றின் போது டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

குழந்தைகளுக்கு காத்திருக்கும் ஆபத்து

தகுந்த ஆன்லைன் நடத்தையை அவர்களுக்குக் கற்பிப்பது, அவர்களை பாதிக்க வாய்ப்புள்ளவற்றை எச்சரிக்கையுடன் தவிர்ப்பது, தனியுரிமை பாதுகாப்பு மற்றும் ஆன்லைன் எல்லைகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது ஆகியவை இதில் அடங்கும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. "இன்றைய மெய்நிகர் நவீன உலகில், நட்பு, நேசம் பெயர்களில் பதின்ம வயதினரிடையே தூண்டிலிடும் ஆபத்துகள், பாலியல் தொழிலுக்கான மனிதக் கடத்தல் மற்றும் பிற குற்றங்களை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இல்லை” என்று நீதிபதி ஸ்வரண காந்தா சர்மா கவலை தெரிவித்துள்ளார்.

’மைனர் பெண் ஒருவரை கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது மற்றும் அப்பெண்ணை தனது மகன் ராஜீவ் பாலியல் பலாத்காரம் செய்ய உதவியது’ ஆகியவற்றில் குற்றம் சாட்டப்பட்ட கமலேஷ் தேவி என்ற பெண்ணின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யும்போது இவ்வாறு உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்தார்.

16 வயது சிறுமி ஒருவருக்கு ஆன்லைனில் அறிமுகமான ராஜீவ், சமூக ஊடகம் வாயிலாக வளர்த்த நட்பை பயன்படுத்தி நேரில் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். தன்னை நம்பி வீட்டைவிட்டுக் கிளம்பிய சிறுமியை, மத்திய பிரதேசத்திற்கு அழைத்துச் சென்ற ராஜீவ் மேலும் சில நபர்களுடன் சேர்ந்து தொடர் பாலியல் பலாத்காரத்தை நிகழ்த்தியிருக்கிறார். இதற்கு அவனது தாய் கமலேஷ் தேவியும் உடந்தையாக இருந்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவு

மேலும் பணத்திற்காக அந்த சிறுமியை 45 வயது ஆண் ஒருவரை திருமணம் செய்து கொள்ளுமாறும் வற்புறுத்தி உள்ளனர். இவையனைத்தையும் அந்த 16 வயது சிறுமி மீட்கப்பட்ட பின்னர், நீதிமன்ற விசாரணையில் தெரிவித்தார். அப்பெண் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தை உறையச் செய்தது.

"பாரம்பரியமாக, சிறார்களை தீங்கிழைப்பதில் இருந்து பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். தேகத்தில் 'நல்ல தொடுதல்' மற்றும் 'கெட்ட தொடுதல்' பற்றி அவர்களுக்குக் கற்பிப்பதிலும் கவனம் செலுத்துகிறோம். இருப்பினும், இன்றைய மெய்நிகர் உலகில், 'விர்ச்சுவல் டச்' என்ற கருத்தை உள்ளடக்கியதாக, இந்தக் கல்வியை விரிவுபடுத்துவது மிகவும் முக்கியமாகிறது. இணையவழி தொடர்புகளை பாதுகாப்பாக வழிநடத்தவும், சைபர்ஸ்பேஸில் பதுங்கியிருக்கும் அபாயங்களை அடையாளம் காணவும் சிறார்களுக்கு அவசியமான அறிவு மற்றும் உத்திகள் வழங்கப்பட வேண்டும். ஆன்லைன் அச்சுறுத்தல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள குழந்தைகளுக்கு அதிகாரம் அளிக்க முடியும். இது காலத்தின் தேவை” என்றும் நீதிமன்றம் கூறியது.

இதையும் வாசிக்கலாமே...

குழந்தையை தூக்கிப் போட்டுப் பிடித்து கொஞ்சி மகிழ்ந்த பிரதமர் மோடி... தீயாய் பரவும் வீடியோ!

சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்ற கார்... தடுத்த ஊழியர் மீது காரை ஏற்றியதால் பரபரப்பு!

இளையராஜா இசை தயாரிப்பாளருக்குத்தான் முழு சொந்தம்... தமிழ்பட இசையமைப்பாளர் பேட்டி!

பெண் ஓட்டிச் சென்ற காரை துரத்திச் சென்று பீர் பாட்டில்களால் தாக்குதல்... வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி!

அதிர்ச்சி... வெயிலில் சுருண்டு விழுந்து தேர்தல் அதிகாரி உயிரிழப்பு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE