அதிர்ச்சி... பல்கலைக்கழக தண்ணீர் தொட்டியில் இளம்பெண் சடலம்!

By காமதேனு

உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள கவுதம் புத்தா பல்கலைக்கழக ஊழியர்கள் குடியிருப்பு வளாக தண்ணீர் தொட்டியில் நேற்று ஒரு பெண் சடலம் மீட்கப்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் கவுதம் புத்தா பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு பணிபுரியம் ஊழியர்களுக்கான குடியிருப்பு பல்கலைக்கழக வளாகத்திலேயே உள்ளது. இந்நிலையில் இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள சிமென்ட் தண்ணீர் தொட்டியில் பெண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

தண்ணீர் தொட்டியில் பெண் சடலம் (கோப்பு படம்)

அதன்பேரில் போலீஸார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அந்தப் பெண், கணவர் மற்றும் மாமியாருடன் வசித்து வந்ததும், கணவருக்கும் அவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது என்றும் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர். இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கணவர், மாமியார் தலைமறைவானது தெரியவந்தது.

உயிரிழந்த பெண்ணின் கணவர் அருகில் உள்ள மருத்துவமனையில் வேலை செய்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் பெண்ணை, கொன்றுவிட்டு சம்பவ இடத்திலிருந்து கணவர், மாமியார் தப்பியோடியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி சிவாரி மீனா கூறுகையில், "பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளோம்.

போலீஸ் விசாரணை

தப்பியோடிய குற்றவாளிகளைத் தேட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் இதுதொடர்பான கூடுதல் தகவல் தெரியவரும்" என்றார்.

பல்கலைக்கழக ஊழியர்கள் குடியிருப்பு வளாக தண்ணீர் தொட்டியில் பெண் சடலம் மீட்கப்பட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE