பணத்திற்காக கல்லூரியில் உடன் படித்த கேரள ராணுவ அதிகாரியின் மகனைக் கடத்தி பணம் பறித்த இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்தவர் சஹீல் சலீம். இவர் ராணுவ அதிகாரியின் மகன் ஆவார். இவர் பெங்களூருவில் பட்டப்படிப்பு படித்து வந்தார். இதற்காக பெங்களூருவில் உள்ள சமபிகேஹள்ளியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி கல்லூரி சென்று வந்தார். சஹீல் சலீமுடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவர் முபாரக். அவர்கள் இருவரும் நண்பர்களாவர். போதைப் பழக்கம் உள்ள முபாரக், சஹீல் சலீமை கடத்தி பணம் பறிக்கத் திட்டமிட்டார்.
இதற்காக தன் நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டார். இதன்படி சஹீலை கடத்தி வந்து ஒரு கொட்டகையில் அடைத்து வைத்தனர். அங்கு வைத்து அவரை தாக்கினர். அத்துடன் அவரிடமிருந்து 25 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டு அனுப்பி வைத்தனர்.
இதனால் பயந்து போன சஹீல் சலீம், தன் சொந்த ஊரான கேரளாவிற்குச் சென்று விட்டார். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த தங்கள் மகன், திடீரென பெங்களூருவில் இருந்து கேரளாவிற்கு வந்தது அவரது பெற்றோருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால், சஹீல் சலீமை அழைத்து என்ன நடந்தது என்று விசாரித்தனர். அப்போது அவர் நண்பர்களால் கடத்தப்பட்டு அடைக்கப்பட்டதும், பணம் கொடுத்து மீண்ட கதையைக் கூறினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை, உடனடியாக இதுகுறீத்து சமபிகேஹள்ளி போலீஸில் புகார் அளித்தனர். இதன்பேரில் கடத்தல் வழக்குத் தொடர்பாக இருவரை போலீஸார் நேற்று மாலை கைது செய்தனர். தலைமறைவாக மூன்று பேரைத் தேடி வருகின்றனர்.
கல்லூரியில் தங்களுடன் படித்த நண்பரை கடத்தி அவரிடமிருந்து மாணவர்கள் பணம் பறித்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.