கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் மினி பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஊட்டிக்கு சுற்றுலா சென்று திரும்பிய எட்டு வயது சிறுமி உயிரிழந்தார். 30 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை பெரம்பூர் மற்றும் சூரப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த நண்பர்கள் சிலர் இணைந்து தங்களது குடும்பத்தினருடன் உதகைக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர், கடந்த 30-ம் தேதி இரவு சென்னையில் இருந்து நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டு மறுநாள் காலை மேட்டுப்பாளையம் சென்றடைந்தனர்.
அங்கிருந்து ஊட்டி செல்வதற்காக மினி பேருந்தை வாடகைக்கு ஏற்பாடு செய்தனர். அந்த மினி பேருந்து மூலம், உதகைக்குச் சென்ற அவர்கள் அங்கு தங்கி மூன்று நாட்களாக பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று சுற்றிப் பார்த்தனர். அதைத் தொடர்ந்து நேற்று மாலை 5 மணிக்கு ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு மினி பேருந்தில் புறப்பட்டனர்.
இரவு 7 மணி அளவில், கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில், பவானிசாகர் அணை காட்சி முனை அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி பேருந்து அங்கிருந்த 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால், அதிலிருந்த சுற்றுலாப் பயணிகள், பேருந்துக்கு உள்ளேயே சிக்கிக் கொண்டனர். அவர்கள் கூக்குரல் எழுப்பியதை தொடர்ந்து, அருகே இருந்தவர்கள் மற்றும் காவலர்கள் இணைந்து அவர்களை உயிருடன் மீட்டனர்.
ஆனாலும் இந்த விபத்தில், பேருந்தின் அடிப்பகுதியில் சிக்கிய எட்டு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர்கள் அனைவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இன்பச் சுற்றுலா வந்த இடத்தில் சிறுமி உயிரிழந்தது அவர்கள் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.