மின்சாரம் தடைபட்டதால் செல்போன் லைட்டில் அறுவை சிகிச்சை... தாயும் சேயும் உயிரிழந்த சோகம்!

By காமதேனு

மும்பை மாநகராட்சி மருத்துவமனையில், மின்சாரம் தடைப்பட்ட நேரத்தில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் நடைபெற்ற அறுவை சிகிச்சையின் போது தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான குசுருதீன் அன்சாரி. இவரது 26 வயது மனைவி ஷாஹிதுன், 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த திங்கட்கிழமையன்று அவர் மும்பையில் உள்ள பிரிஹன் மும்பை மாநகராட்சி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பிரசவ வலி ஏற்படாததால், அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். இது தொடர்பாக அவரது குடும்பத்தினரிடமும் அவர்கள் அனுமதி பெற்று இருந்தனர்.

மருத்துவமனையில் கவலையுடன் காத்திருக்கும் உறவினர்கள்

இதையடுத்து ஷாஹிதுனை அறுவை சிகிச்சை அரங்குக்குள் அழைத்துச் சென்றபோது, மருத்துவமனை வளாகத்தில் திடீரென மின்சாரம் தடைபட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக ஜெனரேட்டர் ஆன் செய்யப்படாததால், அறுவை சிகிச்சை கூடத்தில் இருந்த மருத்துவர்கள், கையில் இருந்த செல்போன் டார்ச் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு ஷாஹிதுனும் அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிஹன் மும்பை மாநகராட்சி

இதையடுத்து கடந்த நான்கு நாட்களாக அன்சாரியின் உறவினர்கள், மருத்துவமனை வளாகத்தின் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களுக்கு ஏற்பட்டது மிகப்பெரிய இழப்பு என தெரிவித்துள்ள அவர்கள், தவறிழைத்த மருத்துவர்களும் அந்த தண்டனையை அனுபவிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

4 நாட்கள் தொடர் போராட்டத்தை அடுத்து, இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த, இன்று பிரிஹன் மும்பை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பிரிஹன் மும்பை மாநகராட்சி இந்தியாவிலேயே மிகவும் செழிப்பான மாநகராட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE