சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட வழக்கு... போர்ச்சுகல் நாட்டில் அன்மோல் பிஷ்னோய் பதுங்கலா?

By காமதேனு

சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொறுப்பேற்றுக் கொண்ட பிரபல தாதாவின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய்க்கு எதிராக மும்பை போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் சல்மான் கானின் வீடு மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ளபாந்த்ரா பகுதியில் அமைந்துள்ளது. கடந்த ஏப்ரல் 14ம் தேதி அன்று இரண்டு மர்ம நபர்கள் சல்மான் கான் வீட்டை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

சல்மான் கான் - அன்மோல் பிஷ்னோய்

அப்போது குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரன் அன்மோல் பிஷ்னோய், இந்த துப்பாக்கி சூட்டுக்கு பொறுப்பேற்றுக்கொள்வதாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். தங்களின் நோக்கம் யார் உயிரையும் பறிப்பது அல்ல எனவும், அவர்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவது தான் எனவும் அந்த பதிவில் தெரிவித்து இருந்தார். நாடு முழுவதும் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மும்பையில் உள்ள சல்மான் கான் வீடு

இந்த நிலையில் அன்மோல் எங்கிருக்கிறார் என்பது தொடர்பாக மும்பை சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் போர்ச்சுகல் நாட்டில் இருப்பது தெரிய வந்திருப்பதாகவும், ஆனால் அவரது பேஸ்புக் பதிவு கென்யா நாட்டில் உள்ள ஐபி அட்ரஸிலிருந்து பதிவு செய்திருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் போர்ச்சுகல் தப்பிச் சென்றாரா, அல்லது உள்நாட்டிலேயே வேறு ஏதேனும் இடத்தில் இருக்கிறாரா என்பதை தெரிந்து கொள்வதற்காக தீவிர தேடுதல் வேட்டைகள் நடைபெற்று வருகிறது.

இதனிடையே அவர் இந்தியாவில் இருந்து தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்க வேண்டும் என உள்துறை அமைச்சகத்திற்கு மும்பை போலீஸார் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் அடிப்படையில் நேற்று அவருக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட விக்கி குப்தா (24), சாகர் பால் (21) ஆகியோருடன் மேலும் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். சுபாஷ் சந்திரா (37), அனுஜ் தப்பான் (32) ஆகிய பஞ்சாபி சேர்ந்த இருவரும் துப்பாக்கி சூடு நடத்திய இருவருக்கும் துப்பாக்கிகளை வழங்கியது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிறையில் உள்ள லாரன்ஸிடமும் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE