இன்சூரன்ஸ் பணத்துக்காக நண்பரை கொலை செய்துவிட்டு, நாடமாடிய ஜிம் மாஸ்டர் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை எண்ணூர் அடுத்த எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் டில்லிபாபு(39). இவர் அப்பகுதியில் பெயின்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 9ம் தேதி, தனது நண்பர் சுரேஷ் உட்பட 2 பேருடன் இணைந்து வெளியூருக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றார். ஆனால், அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, அவரது தாய் லீலாவதி எண்ணூர் போலீஸில் புகார் அளித்தார். ஆனால், டில்லிபாபு குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதோடு, டில்லிபாபுவை அழைத்துச் சென்ற நண்பர் சுரேஷ் என்பவர், விபத்து ஒன்றில் உயிரிழந்ததும் தெரியவந்தது.
இதனால், இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்தது. இந்நிலையில் லீலாவதி தனது மகனை கண்டுபிடித்து தரவேண்டும் என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை போலீஸார் தீவிரப்படுத்தினர். இதையடுத்து, உயிரிழந்த சுரேஷ் குறித்தும், அவருடன் இருந்ததாக கூறப்பட்ட 2 நண்பர்கள் குறித்து விசாரித்தனர்.
இதையடுத்து, சுரேஷின் குடும்பத்தினரிடம் விசாரித்ததில், சில தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருந்தது. இதையடுத்து, அவர்களை கண்காணித்ததில், அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தது. அதாவது சுரேஷ் உயிரோடு இருப்பது போலீஸூக்கு தெரியவந்தது. இதையடுத்து, அரக்கோணம் அருகே தலைமறைவாக இருந்த சுரேஷ் அவரது நண்பர்களான ஹரிகிருஷ்ணன், கீர்த்திராஜன் ஆகியோரை கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
இதையடுத்து, அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல பகீர் உண்மைகள் அம்பலமானது. சென்னை அயனாவரத்தை சுரேஷ் ஜிம் மாஸ்டராக பணியாற்றி வந்தார். அவரும் டில்லிபாபுவும் நண்பர்களாக இருந்துள்ளனர். சிறிது காலம் கழித்து டில்லிபாபு தனது தாய் லீலாவதியுடன் எண்ணூருக்கு சென்றார். இதனையடுத்து, இருவரும் தங்களது நட்பை தொடர முடியாமல் போனது. இந்த சூழலில், சுரேஷ் தனது பெயரில் 1 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்தார். அந்த பணத்தை எப்படியாவது தான் அனுப்பவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதற்காக தான் இறந்துவிட்டதாக நாடகமாட திட்டமிட்டார். மேலும், தனக்கு பதிலாக ஒருவரை கொலை செய்ய ஆள் தேடினார். அப்போது, தனது நண்பர் டில்லிபாபு நினைவுக்கு வந்துள்ளார்.
இதனையடுத்து, அவரை தேடி எண்ணூர் சென்ற சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் இருவரும், அவரது வீட்டிலேயே தங்கியுள்ளனர். பின் சுரேஷ், டில்லிபாபுவை வெளியூருக்கு வேலைக்கு அழைத்து செல்வதாக கூறிவிட்டு, கூட்டிச்சென்றார். இதையடுத்து, அவர் அச்சிறுபாக்கம் அருகே சுரேஷுக்கு சொந்தமான இடத்திற்கு சென்று தங்கினர். அங்கு புதிதாக கட்டப்பட்ட குடிசையில் அனைவரும் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். செப்டம்பர் 16ம் தேதி இரவு மூவரும் சேர்ந்து டில்லிபாபுவை கழுத்தை நெரித்து கொன்று, குடிசையை பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டு, அரக்கோணம் அடுத்த திருவாலங்காட்டிற்கு தப்பிச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து, குடிசை வீட்டில் உடல் கருகி இறந்தது சுரேஷ் தான் என, அவரது அக்கா மரியஜெயஸ்ரீ ஒரத்தி போலீஸாரிடம் மனு அளித்தார். அதன் அடிப்படையில் செங்கல்பட்டு மருத்துவமனையில் இருந்த டில்லிபாபுவின் உடலை பெற்று, சுரேஷ் உடல் போல சென்னை அயனாவரத்தில் அடக்கம் செய்துள்ளார். சுரேஷ் உயிரிழந்ததாக அயனாவரத்தில் கண்ணீர் அஞ்சலி போஸ்டரும் ஒட்டி நாடகமாடியதும் அம்பலமானது. இதில், இன்சூரன்ஸ் பணம் 1 கோடி ரூபாயில் கீர்த்திராஜன், ஹரிகிருஷ்ணன் ஆகியோருக்கு தலா 20 லட்சம் ரூபாய் தருவதாக சுரேஷ் கூறியதும் அம்பலமானது. இதையடுத்து, மூவர் மீதும் வழக்கு பதிந்த போலீஸார், மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகள்... இன்று முதல் விசாரிக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
இந்தியாவில் ஒரே மாதத்தில் 71 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்
அதிரடி! ரூ.806 கோடி ஜிஎஸ்டி பாக்கி தொகையை செலுத்த எல்ஐசிக்கு நோட்டீஸ்!
61 உயிர்களை பலிவாங்கிய முகலிவாக்கம் வழக்கு: 7 ஆண்டுகளுக்கு பிறகு இன்று விசாரணை!