குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமியை 11 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டும் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகா மாவட்டம், கல்யாண்பூர், ரான் கிராமத்தில் வசித்து வருபவர் முலா சகாரா. இவருக்கு ஏஞ்சல் சகாரா என்ற மூன்று வயதுடைய மகள் இருந்தார். முலாவின் குடும்பத்தினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வேண்டி ஆழ்துளை கிணறு அமைத்துள்ளனர்.
ஆனால், வறுமை காரணமாக அவர்களால் மேற்படி பணிகளை செயல்படுத்த முடியவில்லை. இதனால் ஆழ்துளை கிணற்றின் மேற்பகுதி மீது பிளாஸ்டிக் ஒன்றை வைத்து தற்காலிகமாக மூடி அதனை கைவிட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று மதியம் குழந்தை ஏஞ்சல், கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றின் பிளாஸ்டிக் மூடி மீது ஏறி நின்றுள்ளார்.
அப்போது, திடீரென ஆழ்துளை கிணற்றின் மூடி பாரம் தாங்காமல் உடைந்துவிட, சிறுமி அதற்குள் விழுந்துள்ளார். 130 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் குழந்தை 30 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டார். இதனையடுத்து, காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
சுதாரித்த அதிகாரிகள் தேசிய மற்றும் மாநில மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இந்திய ராணுவ அதிகாரிகளும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்ட அதிகாரிகள், இரவு 09:18 மணியளவில் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
அவர் தொடர்ந்து மயக்கத்திலேயே இருந்ததால், மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட குழந்தை, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மறைவு அந்த கிராமத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.