கள்ளத்துப்பாக்கி... ரத்தம் படிந்த கோடாரி... கோடநாடு வழக்கில் அதிமுக பிரமுகருக்கு சிக்கல்!

By காமதேனு

நீலகிரியில் வனவிலங்குகளை வேட்டையாடிய வழக்கில் கோடநாடு வழக்கில் விசாரிக்கப்பட்டு வரும் அதிமுக பிரமுகர் சஜீவன், தலைமுறைவாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் அமைந்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு இங்கு நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகரும், முன்னாள் வர்த்தக அணி செயலாளர் ஜீவன் என்பவரிடம் போலீஸார் பலமுறை விசாரணை நடத்தியுள்ளனர்.

கோடநாடு எஸ்டேட்

இந்த நிலையில் சஜீவனுக்கு சொந்தமான சில்வர் கிளவுட் எஸ்டேட் கூடலூர் பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 21ம் தேதி இங்கு வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக வந்த தகவலை அடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது எஸ்டேட்டின் ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் வசித்து வந்த பைசல் மற்றும் சாபு ஜேக்கப் ஆகியோரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியானது.

சஜீவனுக்கு சொந்தமான எஸ்டேட்டில் பணிபுரிந்து வந்த மூவர் கைது

சஜீவனின் நண்பர்கள் பலர் அடிக்கடி இந்த எஸ்டேட்டிற்கு வந்து சென்றுள்ளனர். இந்த எஸ்டேட்டின் அருகில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் இருந்து வந்துள்ளது. இந்த வனவிலங்குகளை வேட்டையாடி அதன் கறியை சமைத்து உண்பதற்காக கள்ளத் துப்பாக்கிகள் இரண்டை சஜீவன் வாங்கி வைத்துள்ளது தெரிய வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சருகு மான் ஒன்றை துப்பாக்கியால் வேட்டையாடி அதன் கறியை சமைத்து சாப்பிட்டுள்ளனர். அதேபோல் இரண்டு வாரங்களுக்கு முன்பு காட்டு மாடு ஒன்றை வேட்டையாடி அதன் கறியை சமைத்து சாப்பிட்டு உள்ளனர். அதன் எலும்புகளை சாக்கில் கட்டி எடுத்து சென்று அருகில் உள்ள வனப்பகுதியில் வீசிவிட்டு வந்துள்ளனர்.

தலைமறைவாகிவிட்ட அதிமுக பிரமுகர் சஜீவன்

இதையடுத்து இரண்டு துப்பாக்கிகள், பத்துக்கும் மேற்பட்ட வெடிக்கப்படாத தோட்டாக்கள், விலங்குகளின் ரத்தக்கரை படிந்த கோடாரிகள், கத்திகள் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பைசல், சாபு ஜேக்கப், எஸ்டேட் மேலாளர் பரமன் ஆகிய மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் அறிந்ததும் சஜீவன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. தலைமுறைவாக உள்ள சஜீவன், ஸ்ரீகுமார் மற்றும் சுபைர் ஆகியோரை தேடும் பணியில் தனிப்படை போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE