ஆலையில் இருந்து வெளியேறிய புகையால் 30 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம்... சீல் வைத்த அதிகாரிகள்!

By காமதேனு

விழுப்புரம் அருகே மருத்துவக் கழிவுகள் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து வெளியேறிய புகையால், 35 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அந்நிறுவனத்திற்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம், நன்னாடு ஊராட்சிக்குட்பட்ட வேடம்பட்டு கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் வேடம்பட்டு சிறைச்சாலை அருகே தனியார் நிறுவனத்தின் மருந்துப் பொருள் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் இரவு நேரத்தில் மருத்துவக் குப்பைகளைக் கொட்டி எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும், சுவாசக் கோளாறு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலை

மேலும் கழிவுகளை நிலத்தடியில் புதைப்பதால் நிலத்தடி நீராதாரமும் பாதிக்கப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். தொழிற்சாலையை சுற்றியுள்ள பகுதியில் ரசாயனம் கலந்த கடும் துர்நாற்றம் வீசுவதாகவும் அவர் குற்றம்சாட்டி வந்தனர்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கருப்புக் கொடி கட்டி ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களைப் பகுதி மக்கள் நடத்தியுள்ளனர். ஆனால், இதுவரை சுத்திகரிப்பு நிலையத்தினை மூட தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு

இதனால் நேற்று முன்தினம் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை இப்பகுதி மக்கள் புறக்கணித்தனர். அப்போது அங்கு வந்த அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தி அந்த நிறுவனம் செயல்படக்கூடாது என அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர். ஆனால் நேற்று இரவு மீண்டும் இந்த ஆலையை நிறுவன உரிமையாளர்கள் நோட்டீஸை கிழித்து விட்டு இயக்கியதாக கூறப்படுகிறது.

அப்போது சுத்திகரிப்பு ஆலையிலிருந்து வெளியேறிய திடீர் நச்சுக்காற்று காரணமாக 35 பேருக்கு வாந்தி மற்றும் மயக்கம், மூச்சு திணறல் ஆகியவை ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நிறுவனத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் சீல் வைத்தனர்

இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுத்தலைவரும், மாவட்ட ஆட்சியருமான பழனி உத்தரவின் பேரில், இன்று அதிகாரிகள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் அந்நிறுவனத்தை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE