போதை மாத்திரை விற்பனை விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில், பள்ளி மாணவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எம்ஜிஆர் நகர், முத்து மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன் மகன் அஜய் (17). அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 26 ம் தேதி இரவு கடைக்கு செல்வதாக கூறி சென்றவர், வீடு திரும்பவில்லை. அதனால் அவரது தந்தை லோகநாதன், பல இடங்களில் மகனை தேடியும் கிடைக்காததால், எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் அவரை தேடிய நிலையில் மறைவிடம் ஒன்றில் கழுத்து, மார்பு பகுதியில் காயத்துடன் கிடந்த அஜய்யின் சடலத்தை போலீஸார் கைப்பற்றினர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வந்தனர். அவர்களின் விசாரணையில் போதை மாத்திரை விற்பனை விவகாரம் தொடர்பாக இந்த கொலை நடந்திருப்பது தெரிய வந்தது. எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த கண்ணபிரான்,(24), சரவணன் (28) என்ற இருவரும் சேர்ந்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்தனர். பின்னர் இருவரும் தனித்தனியாக போதை மாத்திரை விற்பனை செய்து வருகின்றனர். மாத்திரைகளை வாங்கிய விவகாரத்தில் சரவணனுக்கு, கண்ணபிரான், 15,000 ரூபாய் கொடுக்க வேண்டியது இருந்தது.
மேலும் கண்ணபிரான், பள்ளி மாணவர் அஜய் மூலமாக மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது சரவணனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் கண்ணபிரானை தட்டிக் கேட்க டேவிட், என்ற நண்பருடன், கண்ணபிரான் வீட்டுக்கு சரவணன் சென்றுள்ளார்.
அங்கு அவர் இல்லாததால், அவரது உறவினரான அஜய்யை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர். நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய டேங்க் அருகே வைத்து போதை மாத்திரை விற்பனை தொடர்பாக அஜய்யை மிரட்டியுள்ளனர். அதனால் பயந்து போன அஜய் தப்பி ஓட முயன்றுள்ளார். அப்போது, அவரை மார்பு மற்றும் கழுத்தில் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளனர்.
கொலை தொடர்பாக டேவிட் (25) என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள சரவணனை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். போதை மாத்திரை விற்பனை விவகாரத்தில் பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.