தேர்தல் நேரத்திலும் திகு திகு... சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

By காமதேனு

சட்டவிரோத பணப்பரிமாற்ற புகார் எதிரொலியாக சென்னையில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக இன்று சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் நாளை(ஏப்.19) நடைபெறுகிறது. இதனையொட்டி நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது‌. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமலாக்க துறை

மேலும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புக்கள் ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுகிறதா என்பதை தீவிரமாக கண்காணித்து வருகின்றன.

இந்த நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் புகார் எதிரொலியாக இன்று காலை முதல் சென்னையில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கம் மோகன் குமாரமங்கலம் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தர்ஷன் குமார் என்பவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதைபோல் சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் பிரதான சாலையில் வசித்து வரும் முபாரக் உசைன் என்பவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

முபாரக் உசைன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். வெளிநாட்டிற்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை அசோக் நகர் 9-வது அவென்யூ, 3-வது தெருவில் செயல்பட்டு வரும் தனியார் ஆடிட்டிங் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. மேலும் சென்னை தேனாம்பேட்டை செனடாப் சாலையில் கிளாசிக் செட்டிநாடு அப்பார்ட்மென்ட்டில் வசித்து வரும் ஒருவரது வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது.

மக்களவைத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் சென்னையில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருவது அரசியல் கட்சியினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE