சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் மின்சாரம் தாக்கி லைட்மேன் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை நயன்தாரா நடித்த 'அறம்' படத்தை இயக்கியவர் கோபி நயினார். இந்த படம் தமிழ் திரையிலகில் வித்தியாசமான படமாக ரசிகர்களால் வரவேற்பு பெற்றது. அதன்பின்னர் நீண்ட நாட்களாக படம் இயக்காமல் இருந்துவந்த கோபிநயினார் தற்போது 'அகரம் காலனி' என்ற படத்தை இயக்கி வருகிறார். நடிகை ராதிகா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
அதன்படப்பிடிப்பு திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு நடைபெற்ற படப்பிடிப்பின்போது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் லைட்மேன் சண்முகம் என்பவர் கடுமையாக பாதிக்கப்பட்டார். அவருடன் இருந்த ரஞ்சித் என்பவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இதையடுத்து இருவரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர், சண்முகம் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். ரஞ்சித் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.