அதிகாலையில் ரவுடிகள் 2 பேர் சுட்டுக்கொலை... காஞ்சிபுரம் அருகே பரபரப்பு!

By காமதேனு

காஞ்சிபுரம் அருகே இன்று அதிகாலை ரவுடிகள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரவுடி சரவணனை கொலை செய்யும் கும்பல்

காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன காஞ்சியில் சரித்திரப் பதிவேடு குற்றவாளியும், பிரபல ரவுடியுமான சரவணன் என்ற பிரபாகரனை அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இச்சம்பம் தொடர்பாக சிவகாஞ்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் ரவுடி சரவணன் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும் பிரபல ரவுடி வசூல்ராஜாவின் கூட்டாளிகளான காஞ்சிபுரம் பல்லவமேடு பகுதியைச் சேர்ந்த ரவுடி ரகு என்ற ரகுவரன்(32) மற்றும் சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரவுடி அசேன் என்ற கருப்பு அசேன்(29) ஆகியோர் தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து மாமுல் தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பிரபாகரனை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சுட்டுக்கொலை

இதனையடுத்து சிவகாஞ்சி போலீஸார் தனிப்படை அமைத்து கொலையாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில் ரவுடி ரகுவரன் மற்றும் கருப்பு அசேன் ஆகியோர் காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் மேம்பாலம் அருகே பதுங்கி இருப்பதாக இன்று அதிகாலை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் தனிப்பட போலீஸார் இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்று ரவுடிகளைச் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர். அப்போது ரவுடிகள் இருவரும் போலீஸாரை பயங்கர ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றனர். இதனால் போலீஸார் தற்காப்புக்காக இருவரை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ரகுவரன் மற்றும் கருப்பு அசேன் ஆகியோர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறை உயர் அதிகாரிகள் இருவரது சடலத்தையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஏ கேட்டகிரி ரவுடிகளான ரகுவரன் மற்றும் அசேன் மீது ஏற்கெனவே கொலை, கடத்தல், அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரத்தில் ரவுடி இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ரவுடிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE