ஒடிசாவில் பாலத்தில் இருந்து பேருந்து விழுந்த விபத்தில் 5 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், 40 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
ஒடிசா மாநிலம் ஜாஜ்பூரில் இருந்து கொல்கத்தா நோக்கி நேற்று இரவு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து குவாக்கியா என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு பாலத்தில் இருந்து தலைகீழாக பேருந்து கவிழ்ந்தது. நள்ளிரவு நேரத்தில் நடந்த விபத்து என்பதால் சாலையில் சென்றவர்களுக்கும் அருகில் இருந்து அவர்களுக்கும் உடனடியாக எதையும் செய்ய இயலவில்லை.
எனவே, இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மற்றும் மீட்பு படையினர் பேருந்துக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 30-க்கும் மேற்பட்டோர் படு காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பேருந்து விபத்தில் உடல் நசுங்கி 5 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வேறு யாராவது பேருந்துக்குள் சிக்கியிருக்கிறார்களா என மீட்பு பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்தக் கோர விபத்து ஒடிசாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநில நிர்வாகம் அந்தப் பகுதியில் மீட்பு பணிக்குத் தேவையான வசதிகளை செய்து தரவும், காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.