ஆந்திராவில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் ஆறு பேர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்தவர்கள் ராய நாகேஸ்வரராவ் மற்றும் ராய வெங்கடேஸ்வர ராவ். இவர்கள் இருவரும் பிரகாசம் மாவட்டம், கொமரோலுவில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று காரில் சென்றிருந்தனர். நிகழ்ச்சி முடிந்த பின்னர் இருவரும் மீண்டும் குண்டூர் நோக்கி காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். நாகேஸ்வரராவ் காரை ஓட்டினார்.
பிரகாசம் மாவட்டம், அனந்தபூர் - அமராவதி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தபோது குந்தாவில் இருந்து மார்க்காபுரம் நோக்கி 8 பயணிகளுடன் வந்த ஆட்டோ மீது கார் கட்டுப்பாட்டை இழந்து பயங்கர வேகத்தில் மோதியது. இதில் ஆட்டோ சுமார் 10 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டது. காரின் இடிபாடுகளில் சிக்கி நாகேஸ்வரராவ், ராய வெங்கடேஸ்வரா, ஆட்டோ டிரைவர் ஷேக் அபித் உசேன் ஆகியோர் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டு சிகிச்சைக்காக குண்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆட்டோவில் பயணித்த அபிநயா (12), டேனியல் (45) ரத்னாதேவி (9) ஆகியோர் இறந்தனர். மேலும் ஆட்டோவில் பயணம் செய்த வேளாண் கல்லூரி 3 மாணவிகள் மூன்று பேர் படுகாயத்துடன் மார்க்கபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு... விண்ணை பிளந்த கோவிந்தா... ரங்கா கோஷம்!
அதிர்ச்சி... 8வது மாடியிலிருந்து அறுந்து விழுந்த லிப்ட்; உயிருக்கு போராடும் 5 ஊழியர்கள்
47 ஆயிரத்தை தொட்டது தங்கம் விலை... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
2023 Rewind | சிவகார்த்திகேயன் முதல் த்ரிஷா வரை... பிரபலங்களைச் சுழற்றியடித்த சர்ச்சைகள்!