நொய்டாவில் 8வது மாடியிலிருந்து லிஃப்ட் அறுந்து விழுந்த விபத்தில் 9 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 5 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் செக்டார் 125 ரிவர்சைட் டவரில் உயரமான கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் எட்டாவது தளத்தில் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று மாலை பணி முடிந்ததும் 9 ஊழியர்கள் லிஃப்ட் மூலம் கீழே செல்ல முயன்றனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக 9 பேருடன் அந்த லிஃப்ட் அறுந்து கீழே விழுந்தது. இதில் பியூஷ் சர்மா (22), அபிஷேக் பண்டிட் (23), அபிஷேக் குப்தா (24), சவுரப் கட்டியா (28), ரஜத் சர்மா (29), சுபம் பரத்வாஜ் (22) யாஷு சர்மா (23), சாகர் (25) அபிஜித் சிங் (23) ஆகிய 9 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
படுகாயமடைந்தவர்களில் 5 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் நிலை பயப்படும் அளவிற்கு இல்லை. அவர்கள் அனைவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நொய்டா போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விபத்து நடந்த கட்டிடத்தின் லிஃப்ட் பராமரிப்பு பணியாளர்கள் இருவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்டாவில் உயரமான கட்டிடங்களில் லிஃப்ட் அறுந்து விழும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.