பாலினத்தை கண்டறிந்து சட்டவிரோத கருகலைப்பு... செவிலியர் உள்பட 5 பேர் கைது

By காமதேனு

தர்மபுரி மாவட்டத்தில் பாலினத்தை கண்டறிந்து சட்டவிரோத கருவலைப்பு செய்து வந்த செவிலியர் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் சட்ட விரோதமாக நடமாடும் ஸ்கேன் சென்டர் நடத்தி கருவில் இருக்கும் குழந்தைகளின் பாலினத்தை கண்டறிந்து கருகலைப்பு செய்து வருவதை கண்டித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில், கற்பகம் என்ற செவிலியர் சட்ட விரோதமாக பாலினத்தை கண்டறியும் சோதனைகளில் ஈடுபட்டு வருவதாக சுகாதாரத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரை சுகாதாரத்துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

செவிலியர் உள்பட 5 பேர் கைது

இந்தநிலையில் தர்மபுரி மாவட்டம், காரியமங்கலம் அருகே உள்ள செம்மண்குழிமேடு பகுதியில் சுபாஷ் என்பவரின் வீட்டில் சட்ட விரோதமாக ஸ்கேன் வைத்து கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிந்து கருக்கலைப்பு செய்வதாக காவல்துறையினருக்கும். சுகாதாரத்துறையினருக்கும் தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வரைந்து சென்ற காவல்துறையினர் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில், நேற்று மட்டும் இவர்கள் 7 பெண்களுக்கு கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்று கண்டறிந்து அவர்களிடம் தெரிவித்து இருக்கின்றனர்.

இதையடுத்து கற்பகம், அவரது கணவர் விஜயகுமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த செம்மண்குழிமேடு பகுதியை சேர்ந்த சுபாஷ், ஆட்டோ ஓட்டுநர் செல்வராஜ், இடைத்தரகர் என 5 பேரை சுகாதாரத்துறையினர் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து ஸ்கேன் கருவி, லேப்டாப், 2 சொகுசு கார்கள், ஆட்டோ, செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE