நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.207 கோடி சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி

By காமதேனு

பொதுமக்களிடம் இருந்து முதலீடு பெற்று பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 207 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நியோமேக்ஸ் மற்றும் அதன் 63 துணை நிறுவனங்கள் பொது மக்களிடமிருந்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தது. மேலும் நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனம், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால், முதலீட்டு பணம் இரட்டிப்பாகும், மாதந்தோறும் 30 சதவீத வட்டி வீதம் 12 மாதங்களுக்கு தருவதாக அளித்த வாக்குறுதியை நம்பி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல கோடி ரூபாயை இந்நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

ஆனால், நியோமேக்ஸ் நிறுவனம் கூறியது போல் முறையாக பணத்தை திருப்பி தராமல் மோசடியில் ஈடுபட்டதால் முதலீட்டாளர்கள் இது குறித்து மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதன் பேரில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநரான வீரசக்தி கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், உள்ளிட்ட சிலர் மீது பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த நிதி நிறுவனத்திற்கு சொந்தமான விருதுநகர், திருநெல்வேலி, திருச்சி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தி பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க்கள், விலையுயர்ந்த சொகுசு கார்கள், தங்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து நியோமேக்ஸ் நிறுவனத்தின் முக்கிய இயக்குநர் கமலக்கண்ணன், பத்மநாபன், சைமன் ராஜா, கபில், இசக்கி முத்து, சகாய ராஜ் உள்ளிட்ட சிலரை பொருளாதார குற்றப்பிரிவு தனிப்படை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தின் தலைமை இயக்குநரும், முக்கிய குற்றவாளியான வீரசக்தி மற்றும் பெண் இயக்குநர் லாவண்யா ஆகிய இருவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் லாவண்யா இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு முக்கிய குற்றவாளி பாலசுப்பிரமணியனின் மகள் என்பது தெரியவந்தது.

மேலும் நியோமேக்ஸ் வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் இந்நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்நிறுவனத்திற்கு சொந்தமான 207 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்கள் குறித்து அந்த நிறுவனத்தின் ஆடிட்டரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


‘அவரை எப்படி பார்த்துக்கணும்னு எங்களுக்குத் தெரியும்...' ஆவேசமாக பதிலளித்த பிரேமலதா!

வெள்ளக்காடாக மாறிய கன்னியாகுமரி; தண்ணீரில் மிதக்கும் தென் தமிழகம்!

தொடரும் கனமழை... தென் மாவட்ட ரயில்கள் ரத்து! இறக்கிவிடப்பட்ட பயணிகள் தவிப்பு!

150 ஆண்டுகளுக்கு பிறகு... தூத்துக்குடியில் கொட்டித்தீர்த்த பெருமழை!

ப்பா... இணையத்தை தெறிக்க விட்ட பீஸ்ட் நாயகி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE