பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் இளைஞர் ஒருவர் நண்பனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்பு உள்ளது. இதில், எழில் நகர் 103வது அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்தவர் கார்த்திக்(22). இவர், அதே பகுதியில் வசித்து வரும் அவருடைய நண்பரான ராஜேஷ் என்பவருக்கு ரூபாய் 1000 கடனாக கொடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு ராஜேஷை பார்த்த கார்த்திக் தான் கொடுத்த 1000 ரூபாயை கொடு, என கேட்டுள்ளார்.
அதற்கு ராஜேஷ் தன்னிடம் பணம் இல்லை என கூற கார்த்திக், ராஜேஷை அடித்துள்ளார். அப்போது, உடன் இருந்த தினேஷ் என்ற நண்பர் கார்த்திக் மற்றும் ராஜேஷ் இருவரையும் சமாதானம் செய்தார். இதையடுத்து, கார்த்திக்கை அனுப்பி வைத்த அவர், ராஜேஷை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அரை மணி நேரம் கழித்து ராஜேஷ், தினேஷ் வீட்டில் இருப்பதை அறிந்து கொண்ட கார்த்திக் நேராக அங்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாக தவை தட்டி பணம் கேட்டதாக தெரிகிறது.
இதனால், ஆத்திரமடைந்த ராஜேஷ் வீட்டில் இருந்த கத்திரிக்கோலால் கார்த்தியின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில், கார்த்திக் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். உடனே, ராஜேஷ், தினேஷ் மற்றும் சக நண்பர்களின் உதவியுடன் கார்த்திக்கை ஆட்டோவில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு கார்த்திக்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
அதை தொடர்ந்து, கார்திக்கின் உடலை ஆட்டோவில் ஏற்றிக்கொண்ட ராஜேஷ் நேராக பெரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு, தான் ஆத்திரத்தில் கார்த்திக் என்பவரை கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், உடல் காவல் நிலையத்தின் வெளியில் நிற்கும் ஆட்டோவில் உள்ளதாகவும் கூறியுள்ளார். இதைக்கேட்ட போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் கொலையான கார்த்திக்கின் சடலத்தை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து பெரும்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று அக்கம் பக்கத்தினரிடமும், இருவரின் நண்பரான தினேஷிடமும் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து காவல் நிலையத்தில் உள்ள ராஜேஷிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
‘அவரை எப்படி பார்த்துக்கணும்னு எங்களுக்குத் தெரியும்...' ஆவேசமாக பதிலளித்த பிரேமலதா!
வெள்ளக்காடாக மாறிய கன்னியாகுமரி; தண்ணீரில் மிதக்கும் தென் தமிழகம்!
தொடரும் கனமழை... தென் மாவட்ட ரயில்கள் ரத்து! இறக்கிவிடப்பட்ட பயணிகள் தவிப்பு!
150 ஆண்டுகளுக்கு பிறகு... தூத்துக்குடியில் கொட்டித்தீர்த்த பெருமழை!