கரூர்: அரவக்குறிச்சி பகுதியில் காரில் வந்து ஆடு திருடியதாக பாஜக நிர்வாகி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே செப். 27ம் தேதி அதிகாலை நேரத்தில் காரில் வந்த 3 மர்மநபர்கள் அப்பகுதியில் இருந்த 10க்கும் மேற்பட்ட ஆடுகளைத் திருடி சென்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அரவக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஆடு திருடிச் சென்றது திண்டுக்கல் என்ஜிஓ காலனியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (35) என்பதும் திண்டுக்கல் மாவட்டம் பாஜக இளைஞரணி கொடைக்கானல் ஒன்றியச் செயலாளர் என்பதும் தெரியவந்தது. மேலும் கன்னிவாடியைச் சேர்ந்த சதீஷ்குமார் (25), சிவகுமார் (23) ஆகிய 3 பேர் பாஜக கட்சி கொடி கட்டிய காரில் வந்து ஆடு திருடியது தெரியவந்தது.
» திருச்சி மத்திய சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு: மருத்துவமனை முன்பு உறவினர்கள் மறியல்
» கோவையில் சிகிச்சை பெற்றுவரும் ஹரியானா கொள்ளையனிடம் நீதிபதி வாக்குமூலம் பதிவு
இதையடுத்து அரவக்குறிச்சி போலீஸார் 3 பேரையும் நேற்று கைது செய்து அவர்களிடம் இருந்து ஒரு ஆட்டுக்குட்டி, காரை கைப்பற்றி அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி கரூர் கிளை சிறையில் அடைத்தனர்.
இவர்கள் 3 பேரும் தென்னிலை, க.பரமத்தி, அரவக்குறிச்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் காரில் வந்து ஆடு திருடி சென்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.