பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு வழக்கு... என்ஐஏ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

By காமதேனு

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக பிரமுகர் சிக்கியதாக தகவல் வெளியான நிலையில், தேசிய புலனாய்வு முகமை சார்பில் விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் கஃபே ஓட்டல்

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் மார்ச் 1ம் தேதி இரண்டு வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. இந்த குண்டுவெடிப்பில் 9 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு தொடர்பாக தற்போது என்.ஐ.ஏ., தீவிரமாக விசாரித்து வருகிறது. இதுவரை 10க்கும் மேற்பட்டோரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ள என்ஐஏ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்

உணவகத்தில் குண்டு வைத்துவிட்டு தப்பிச்சென்ற நபரின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ள விசாரணை அதிகாரிகள், துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஷிவமோகா, பெல்லாரி சிறைச்சாலைகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷிவமோகா பகுதியில் இருந்து இரண்டு பேரை என்ஐஏ அதிகாரிகள் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்திருந்தனர்.

என்ஐஏ

அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர்களின் செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பாஜக நிர்வாகியான சாய் பிரசாத் என்பவருடன் இருவரும் அடிக்கடி தொடர்பில் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சாய் பிரசாத்திடம் என்ஐஏ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், என்ஐஏ சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில்," குண்டுவெடிப்பை நடத்திய முக்கிய நபரின் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவரது பெயர் முசாவிர் ஹூசைன் சாஹிப் என்பது தெரியவந்திருப்பதாகவும் கூறியுள்ளது. இந்த சதிச்செயலில் அவருக்கு உடந்தையாக இருந்தவர் அப்துல் மதீன் தாஹா எனவும், இருவருமே கர்நாடகாவின் ஷிவமோகா மாவட்டத்தின் தீர்த்தஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு உதவிய முசாமில் ஷரீப் என்பவர் கடந்த மாதம் 26-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் தலைமறைவான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைதுசெய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, அவர்களுக்கு தொடர்புடைய நபர்களை என்ஐஏ விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. சாட்சிகளின் அடையாளம் குறித்த எந்தத் தகவலும் விசாரணைக்கு இடையூறு விளைவிப்பதோடு, சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தலாம் என்பதால் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்" என அந்த அறிக்கையில் என்ஐஏ கேட்டுக்கொண்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE