சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - நடந்தது என்ன?

By KU BUREAU

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நேற்று காலை திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. தொடர்ந்து 4 மணி நேரமாக பட்டாசுகள் வெடித்து சிதறியதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. அதோடு, சுமார் 20 கி.மீ. தூரத்துக்கு அதிர்வு ஏற்பட்டதால் பல வீடுகள் சேதமடைந்தன.

சிவகாசி அருகே உள்ள விஸ்வ நத்தத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. திமுக மாநிலப் பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை சாத்தூர் அருகே முத்தால் நாயக்கன்பட்டியில் இயங்கி வருகிறது. மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப் பாட்டுத் துறையின் உரிமம் பெற்று இயங்கிவரும் இந்த ஆலையில் 50-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸிரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு 100-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் ஆலை அருகில் உள்ள குடியிருப்புகளில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை பட்டாசு தயாரிப்பதற்கான மருந்துகள் வேனிலிருந்து இறக்கப் பட்டன. அப்போது, உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. அதையடுத்து, அங்கிருந்த வெடி மருந்துகள் வெடித்துச் சிதறின. வெடி மருந்துகள் ஏற்றி வந்த ஜீப் ஒன்றும் தீப்பற்றி எரிந்தது. இதனால் அங்கிருந்த தொழிலாளர்கள் அனைவரும் கூச்சலிட்டபடி ஆலையை விட்டு வெளியேறினர். ஆலையின் மற்றொரு பகுதியில் தயாரித்து வைக்கப் பட்டிருந்த பட்டாசுகளை, லாரியில் சில தொழிலாளர்கள் ஏற்றிக்கொண்டிருந்தனர். வெடி விபத்து ஏற்பட்டதால் அங்கிருந்த தொழிலாளர்களும் தப்பியோடினர்.

பட்டாசு குடோனில் தீப்பொறி விழுந்து அங்கும் வெடி விபத்து ஏற்பட்டது. குடோனில் வைக்கப்பட்டிருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பேன்ஸிரக பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதனால் அந்த குடோன் முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது. பட்டாசுகள் ஏற்றப்பட்ட லாரியும் வெடித்துச் சிதறியது. இந்த வெடி விபத்தால் சாத்தூர், ஈஞ்சார், நடுப்பட்டி, எம்.புதுப்பட்டி வரையில் சுமார் 20 கி.மீ. தூரத்துக்கு அதிர்வு உணரப்பட்டது. அதோடு, ஆலையின் அருகே இருந்த தொழிலாளர் குடியிருப்புகளும், காலனி வீடுகளிலும் மேற்கூரைகள் சேதமடைந்தன. ஆலையில் நிறுத்தப்பட்டிருந்த தொழிலாளர்களை ஏற்றிவர பயன்படுத்தப்படும் புதிய வேன்களும் அதிர்வு காரணமாக கண்ணாடிகள் உடைந்து சிதறின.

போலீஸாரை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி வீடுகளிலிருந்து வெளியேறி கிராம எல்லைக்குச் சென்றனர். ஆலை பகுதியில் சுற்றித் திரிந்த மயில், பாம்புகள் போன்ற உயிரினங்களும் இறந்து கிடந்தன. சாத்தூர், வெம்பக்கோட்டை, சிவகாசி பகுதிகளிலிருந்து 5 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களும் விரைந்து சென்றன. காலை 8 மணிக்குத் தொடங்கி நண்பகல் 12 மணி வரை பட்டாசுகள் வெடித்து சிதறியதால் மீட்புப் பணிகள் தாமதமாகின. குடோனின் இடிபாடுகளை அகற்றிய பிறகே, உள்ளே யாரேனும் சிக்கி உயிரிழந்தனரா என்பது தெரியவரும். ஆனால், தொடர்ந்து பட்டாசுகள் வெடிப்பதால் இடிபாடுகளை அகற்ற தாமதம் ஏற்படுவதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்பட்டபோது உண்டான அதிர்வால் சேதமடைந்த காலனி வீடுகளில் வசித்த பொதுமக்கள், தங்களுக்கு உரிய இழப்பீடு கோரி போலீஸாரை முற்றுகையிட்டனர். அதன் பின்னர், சேதமடைந்த வீடுகள் குறித்து வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த விபத்து குறித்து சாத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெடி விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் கூறுகையில், வெடி விபத்து ஏற்பட்டவுடன் லாரி ஓட்டுநர் உட்பட தொழிலாளர்கள் அனைவரும் தப்பி விட்டதால் உயிர் சேதம் ஏற்பட்டதாக தெரியவில்லை. பட்டாசு ஆலை விபத்தில் விதி மீறல்கள் உள்ளனவா என்பது குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE