நில மோசடி விவகாரத்தில் பத்திரப்பதிவு துறை டிஐஜி ரவீந்திரநாத் மேலும் ஒரு வழக்கில் கைது

By KU BUREAU

சென்னை: நில மோசடி விவகாரத்தில் சிறையில் உள்ள பத்திரப்பதிவுத் துறை டிஐஜி ரவீந்திரநாத், மேலும் ஒரு வழக்கில் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் - மதுரை (பொறுப்பு) சரக பத்திரப்பதிவுத் துறை டிஐஜியாக பணியாற்றி வந்தவர் ரவீந்திரநாத்(56). இவர் கடந்த 2021-ல்தென்சென்னை பத்திரப்பதிவுத் துறை பதிவாளராக பணியிலிருந்தார். அப்போது அவர், சென்னை பெருங்களத்தூரில் கலைவாணி என்பவருக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான 1.5 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் பதிவு செய்ததற்கு உடந்தையாக இருந்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கலைவாணி வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, அப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணம் மூலம் பதிவு செய்த குற்றச்சாட்டில் தாம்பரம் சார்-பதிவாளரிடம் உதவியாளராக பணியாற்றிய லதா உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். லதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் சேலம்-மதுரை (பொறுப்பு) சரக பத்திரப்பதிவுத் துறை டிஐஜி ரவீந்திரராத் கடந்த 25-ம் தேதி சேலத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர், அவரை சிபிசிஐடி போலீஸார் சென்னை அழைத்து வந்து நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் தாம்பரம் வரதராஜபுரத்தில் சையது அமீன் என்பவருக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான நிலத்தை காந்தம்மாள் என்பவரின் பெயருக்கு போலி ஆவணங்கள் மூலம் மாற்ற உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் ரவிந்திரநாத்தை சிபிசிஐடிபோலீஸார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே அவர் சிறையில் இருப்பதால், 2-வது வழக்கிலும் கைது செய்ததற்கான ஆவணம் சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE