கன்டெய்னருடன் ரூ.35 கோடி பொருட்கள் திருட்டு: அரசு பேருந்து ஓட்டுநர் கைது

By KU BUREAU

சென்னை: ரூ.35 கோடி மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் அடங்கிய கன்டெய்னர் திருடப்பட்ட விவகாரத்தில், தலைமறைவாக இருந்த அரசு பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மயிலாப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவனம். சென்னை துறைமுகத்தில் சரக்குகளை கையாண்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் மேலாளரான குரோம்பேட்டை, சரஸ்வதிபுரத்தைச் சேர்ந்த பொன் இசக்கியப்பன் (46) என்பவர் துறைமுகம் காவல் நிலையத்தில் சமீபத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், ‘கடந்த 7-ம் தேதி வெளிநாட்டில் இருந்து சுமார் ரூ.35 கோடி மதிப்புள்ள 5,230 டெல் நோட்புக் கம்ப்யூட்டர்கள் அடங்கிய கன்டெய்னரை சென்னை துறைமுகத்தில் உள்ள யார்டில் இறக்கி வைத்தோம்.மீண்டும் 11-ம் தேதி அந்த கன்டெய்னரை எடுப்பதற்காக துறைமுகத்துக்கு வந்து பார்த்தபோது, அதையாரோ திருடி சென்றது தெரியவந் தது. இதில், தொடர்புடையவர்களை கைது செய்து அதில், இருந்த பொருட்களை மீட்டுத் தர வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில், மேலாளர் பொன் இசக்கியப்பன் பணி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றும் இளவரசன் என்பவர், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கன்டெய்னரை திருடி, திருவள்ளூர் மணவாளன் நகரில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த அந்த கன்டெய்னரை போலீஸார் மீட்டனர்.

இதுதொடர்பாக, திண்டுக்கல் நிலக்கோட்டை முத்துராஜ் (46), திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர் ராஜேஷ் (39), அதே பகுதியைச் சேர்ந்த நெப்போலியன் (46), சிவபாலன் (44), திருவள்ளூர் பால்ராஜ் (31), அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (31) ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்து கடந்த வாரம் சிறையில் அடைத்தனர். இளவரசன் உட்பட 3 பேரை போலீஸார் தேடி வந்தனர்.

இந்த சம்பவத்தில், இடைத்தரக ராக செயல்பட்ட, தலைமறைவாக இருந்த தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மாநகர போக்குவரத்துக் கழக ஓட்டுநர் சங்கரன் (56) என்பவரை போலீஸார் கைது செய்து விசாரித்தனர்.

அப்போது, ‘இவ்வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட முத்துராஜ், துறைமுகத்தில் இருந்து சிலபொருட்களை கடத்த வேண்டி இருப்பதால் 40 அடி கன்டெய்னரை ஏற்பாடு செய்து தரும்படியும், அதற்காகரூ.5 லட்சம் தருவதாகவும் கூறினார். பணத்துக்கு ஆசைப்பட்டு ஏற்பாடு செய்து கொடுத்தேன்' என்று சங்கரன் தெரிவித்ததாக போலீஸார் தெரிவித்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரையும் போலீ ஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE