மாமல்லபுரம் அருகே 500 கிலோ குட்கா, கார் பறிமுதல் - வட மாநிலத்தை சேர்ந்த 4 பேர் கைது

By பெ.ஜேம்ஸ் குமார்

மாமல்லபுரம்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கார் மூலம் மாமல்லபுரத்துக்கு கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாமல்லபுரம் டிஎஸ்பி ரவி ஆபிராம் மேற்பார்வையில், போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவு மற்றும் மாமல்லபுரம் போலீஸார் எச்சூர் கூட்டு சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, திருக்கழுக்குன்றத்தில் இருந்து மாமல்லபுரம் நோக்கி வேகமாக வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தபோது அதில் மூட்டை, மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, மாமல்லபுரம் போலீஸார் காரில் வந்தவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று தீவிரமாக விசாரித்த போது பிடிபட்டவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஹரசன் குமார் (22), ஜீவாராம் (20), பேராராம் (37), கிமாராம் (22), என்பது தெரிய வந்தது. இவர்கள், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து குட்காவை கொண்டு வந்து மதுராந்தகம், செங்கல்பட்டு, மறைமலைநகர், வண்டலூர், திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம், கூவத்தூர், மாமல்லபுரம், திருப்போரூர், கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்த 500 கிலோ குட்கா, ஒரு கார் மற்றும் 4 செல்போன்களை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர். மேலும், இது குறித்து மாமல்லபுரம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE