குளச்சலில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - அசாம் இளைஞர் கைது

By எல்.மோகன்

நாகர்கோவில்: குளச்சலில் தனியார் வங்கி ஏ.டி.எம்.மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்ற அசாம் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் திருச்சூரில் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து தொடர் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், குமரி மாவட்டம் குளச்சல் பீச் சந்திப்பில் பல்பொருள் அங்காடி அருகே தனியார் வங்கி ஏ.டி.எம்.மையம் உள்ளது. இந்த மையத்திற்குள் நேற்று நள்ளிரவு இளைஞர் ஒருவர் புகுந்துள்ளார். அவர் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுக்காமல் நீண்ட நேரமாக உள்ளே இருந்தார். பின்னர மெஷினை உடைத்து பணம் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.

இதை அந்த வழியாக காரில் சென்றவர்கள் அருகில் இருந்த மருந்து கடையில் உள்ளவர்களுக்கு தகவல் கூறினார். அவர் உடனே குளச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் அங்கு விரைந்து சென்றனர். அதற்குள் இளைஞர் தப்பி அப்பகுதியில் உள்ள ஒரு ஐஸ் கம்பெனிக்குள் புகுந்து ஒளிந்து கொண்டார். போலீஸார் தேடியபோது ஐஸ் கம்பெனிக்குள் இருந்த அந்த இளைஞரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர், அசாம் மாநிலம் நரயன்புர் பகுதியை சேர்ந்த பகர்தீன் அலி மகன் சம்சுல் அலி(22) என்பது தெரிய வந்தது.தொடர்ந்து நடத்திய விசாரணையில் சம்சுல் அலி கடந்த 4 நாட்களுக்கு முன்பு சின்ன முட்டம் துறைமுகத்தில் மீன்பிடி வேலைக்கு வந்தவர் என்றும், தற்போது குளச்சல் துறைமுகத்தில் வேலை பார்க்கும் உறவினர் ஒருவரை பார்க்க வந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில் அவர் ஏ.டி.எம்.மையத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். இதையடுத்து குளச்சல் போலீசார் சம்சுல் அலியை கைது செய்தனர். தொடர்ந்து சம்சுல் அலியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டதால் ஏ.டி.எம்.மையத்தில் உள்ள பல லட்சம் பணம் தப்பியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE