கேளம்பாக்கம்: குழந்தைகளை கொன்றுவிடுவதாக மிரட்டி ஆசிரியையிடம் செயினை பறித்துச் சென்ற கொள்ளையர்கள்

By பெ.ஜேம்ஸ் குமார்

கேளம்பாக்கம்: கேளம்பாக்கம் அருகே, படூரில் குழந்தைகளைக் கொன்று விடுவதாக மிரட்டி பள்ளி ஆசிரியையிடம் 8 சவரன் நகையை பறித்துச் சென்ற கொள்ளையர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கேளம்பாக்கம் அடுத்த படூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுபவர் ஷகிலா (32). இவர் அதே பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். நேற்று மாலை 4.30 மணியளவில் பள்ளி முடிந்ததும் ஷகிலா அதே பள்ளியில் படிக்கும் தனது இரண்டு மகள்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியே ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஷகிலாவிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கழுத்தில் உள்ள செயினை கழற்றிக் கொடுக்கும்படி சொல்லியுள்ளனர். செயினை தராவிட்டால் குழந்தைகளை கொன்று விடுவதாகவும் அவர்கள் மிரட்டி உள்ளனர்.

இதனால் பயந்து போன ஷகிலா, கழுத்தில் கிடந்த 8 சவரன் செயினை கழற்றி அவர்களிடம் கொடுத்துள்ளார். அதை வாங்கிக் கொண்டு அவர்கள் இருவரும் அங்கிருந்து வேகமாகச் சென்று விட்டனர். உடனே தனது கணவர் பிரகாஷுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார் ஷகிலா. அவர் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து கேளம்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று அந்தப் பகுதியில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும். ஷகிலாவிடம் இருந்து புகாரை பெற்று வழக்குப் பதிவு செய்த போலீஸார் நகையைப் பறித்துச் சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE