சென்னை: பாலியல் தொழிலுக்காக அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆந்திரா, கர்நாடகா உட்பட வெளிமாநிலங்களைச் சேர்ந்த13 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.
வெளி மாநிலங்களில் வறுமையில் உள்ள பெண்களைக் குறிவைத்து, வேலை வாங்கித்தருவதாக சில முகவர்கள் சென்னை அழைத்துவந்து, அப்பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திவருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இக்கும்பலைக் கைது செய்ய காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார்.
அதன்படி, மாம்பலம் காவல்நிலைய போலீஸார் தி.நகர் மூசா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென்று நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பெண்களை அடைத்து வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த தமிழகம், கர்நாடகா,ஆந்திரா மற்றும் மேற்குவங்கம்ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 13 இளம்பெண்களை போலீஸார் மீட்டனர். பின்னர், அவர்களை அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
பெண்களைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தெலங்கானா மாநிலம் அதிலாபாத்தைச் சேர்ந்த சிரிகொண்டவம்சி (23), அதே பகுதியைச் சேர்ந்த குடா சந்திரசேகர்(24) ஆகிய இரு முகவர்களைக் கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.