2 குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை: கணவன் கைது @ சேலம்

By த.சக்திவேல்

சேலம்: எடப்பாடி அருகே 2 குழந்தைகளை கொலை செய்து, அவர்களின் தாய் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கணவனை போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தேவூர் அடுத்துள்ள புள்ளாக்கவுண்டம்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி வினோபாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் கோகுல் (30). இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஷில்பா (எ) சுகமதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஞ்சனா ஸ்ரீ (6) ரிஷ்மிகா (2) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர்.

கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, கடந்த மாதம் சுகமதி, தனது குழந்தைகளுடன் உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டார். இந்நிலையில் நேற்று (மே. 25) காலை சுகமதி 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்று விட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் தேவூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தேவூர் போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், சுகமதியின் கணவர் கோகுலிடம், சங்ககிரி டிஎஸ்பி ராஜா தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணை குறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது: கோகுலுக்கும், சுகமதிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கோகுல் பெங்களூரை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வருவதும், அவரை திருமணம் செய்து கொள்வதாகவும், சுகமதியை விவகாரத்து செய்வதாகவும் கூறியுள்ளார்.

இதனால் சுகமதி மன வேதனையில் இருந்து வந்துள்ளார். கோகுல் புதியதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதற்காக மனைவியின் குடும்பத்தினரிடம் ரூ.50 ஆயிரம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

சுகமதிக்கு மகளிர் சுயஉதவி குழு மூலம் ரூ.40 ஆயிரம் கடனாக கிடைக்க, அவர் தனது பெற்றோரிடம் வாங்கிய கடனை கொடுக்க முடிவு செய்துள்ளார். ஆனால், கோகுல் பணத்தை கொடுக்க மறுத்து, அதனை செலவு செய்ததாகவும் தெரிகிறது.

இதுதொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறுக்குப் பின்னர் சுகமதியிடம், கோகுல் பேசவில்லை. இதனால் மனமுடைந்த சுகமதி, தனது குழந்தைகளுக்கு ஜஸ்கிரீமில் விஷம் கலந்து கொடுத்து கொன்று விட்டு, அவரும் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது” இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதனிடையே, கோகுல் மீது தற்கொலைக்கு துண்டுதல், வன்கொடுமை பிரிவு ஆகியவற்றில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரை இன்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE