கோவையில் யானை தந்தங்களை விற்க முயன்ற கும்பல் கைது

By ஆர்.ஆதித்தன்

கோவை: கோவையில் யானை தந்தங்களை விற்க முயன்ற கும்பலை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை கவுண்டம்பாளையம் அருகில் தனியார் குடோனில் யானை தந்தங்கள் விற்க முயற்சி செய்வதாக தமிழ்நாடு வன விலங்கு குற்றக்கட்டுப் பாட்டு ஆணையத்தின் குழுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கோவை வனச்சரக பணியாளர்கள் தனிக்குழுவாக சம்பந்தப்பட்ட இடத்தை தணிக்கை செய்தனர். அப்போது கவுண்டம் பாளையத்தைச் சேர்ந்த சுமதி (55), நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஆஸாத் அலி (45), சங்கனூரை சேர்ந்த நஞ்சப்பன் (47), வெள்ளமடையைச் சேர்ந்த சந்தோஷ் பாபு (42), பாப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த கோவிந்த ராஜுலு (65) ஆகிய 5 பேரும் யானை தந்தத்தை விற்பனை செய்வது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.

இதையடுத்து, 5 பேரையும் வனத்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், அவர்கள் பையில் வைத்திருந்த 2 யானை தந்தங்களையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில், யானை தந்தங்கள் வெங்கடபுரத்தைச் சேர்ந்த செந்தில் வேலன் (62) என்பவருக்கு சொந்தமானது தெரிய வந்தது. இதையடுத்து அவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் 6 பேரையும் கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-1ல் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE