கும்பகோணம்: ரயில்வே பெண் ஊழியரின் 7 பவுன் தாலி சங்கிலியை பறித்த நபருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கும்பகோணம் வட்டம் கொற்கை சேர்ந்தவர் பாலமுருகன் மனைவி சரண்யா (35). தென்னக ரயில்வே பணியாற்றும் இவர், கும்பகோணம் மாதுளம் பேட்டைத் தெரு குறுக்கே செல்லும் இருப்புப் பாதை கேட் கீப்பராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2023, நவம்பர் 6ம் தேதி நள்ளிரவு பணியில் இருந்த சரண்யா கழுத்தில் அணிதிருந்த 7 பவுன் தாலிச் செயினை மர்ம நபர் ஒருவர் பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார். இது தொடர்பாக சரண்யா கும்பகோணம் இருப்புப் பாதை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் மேற்கொண்டு விசாரணையில், நகை பறிப்பில் ஈடுபட்டவர் கும்பகோணம் வட்டம் கொரநாட்டுக் கருப்பூர், நத்தத்தைச் சேர்ந்த சாலமன் (42) என்பது தெரியவந்தது.
பின்னர், கடலூரில் வைத்து சாலமனை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்த 7 பவுன் தங்கச் செயினை மீட்டனர். பின்னர் கைது செய்த சாலமனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இவ்வழக்கின் விசாரணைக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட சாலமனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டனர்.
» சமூக ஊடகங்களால் வந்த வில்லங்கம்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் கைது
» மனைப்பட்டா கோரி பள்ளம் தோண்டி ஜீவசமாதி போராட்டம் - போலீஸார் தடுத்ததால் குளத்தில் குதித்த பெண்