ஆட்டோ ஓட்டுநரின் மனைவியை அபகரித்த புகார் - மதுரை தனிப்படை தலைமைக் காவலர் சஸ்பெண்ட்

By என்.சன்னாசி

மதுரை: மதுரையில் தனது மனைவியை அபகரித்ததாக ஆட்டோ ஒட்டுநர் கொடுத்த புகாரின் பேரில் தனிப்படை தலைமைக் காவலரை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கையைச் சேர்ந்தவர் தயாளன் (38). ஆட்டோ ஓட்டுநரான இவர், சில ஆண்டுக்கு முன் மதுரை புதூர் பகுதியில் குடியேறினார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாளுக்கு முன்பு தயாளன் மாநகர காவல் ஆணையர் லோகநாதனிடம் புகார் ஒன்றை கொடுத்தார்.

அதில், "மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் தனிப்படையில் பணிபுரியும் தலைமைக் காவலர் செல்வராஜ் என்பவர் எனது மனைவியை அபரிக்கும் நோக்கில், என்னிடம் இருந்து அவரை பிரித்துவிட்டார். மனைவிக்கு விவகாரத்து கொடுக்க வலியுறுத்தி என்னை ஆட்களை வைத்து மிரட்டுகிறாார். எனது மகன்களை பார்க்கவிடாமலும் தடுக்கிறார்’ எனத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக விசாரிக்க, தல்லாகுளம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கு, காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மகளிர் போலீஸார், செல்வராஜ், ஆட்டோ ஓட்டுநர் தயாளன் ஆகியோர் தரப்பில் விசாரித்தனர். இந்நிலையில், மகளிர் போலீஸாரின் விசாரணையின் அடிப்படையில் தலைமைக் காவலர் செல்வராஜை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் இன்று பிறப்பித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE