அதிகாலையில் கோர விபத்து... ஆம்னி பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி இருவர் உயிரிழப்பு!

By காமதேனு

திருச்சி அருகே இன்று அதிகாலை ஆம்னி பேருந்துடன் லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.

தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்னையில் இருந்து தென் மாவட்டப் பகுதியான கம்பம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை திருச்சி பால்பண்ணை அருகே வந்து கொண்டிருந்தபோது முன்னாள் செங்கல் ஏற்றிச்சென்ற லாரியை பேருந்து முந்த முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக லாரியும், ஆம்னி பேருந்தும் பயங்கரமாக மோதிக் கொண்டது. இதில் பேருந்தின் முன் பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்தது.

அதில் பேருந்து ஓட்டுநர் மற்றும் பெண் பயணி ஒருவர் என இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த கோட்டை காவல் நிலையப் போலீஸார், உயிரிழந்த ஓட்டுநர் மற்றும் பெண் பயணியின் உடல்களை திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் பேருந்தில் பயணித்த 34 பயணிகளில் 10 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்களையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கு மேல் முடங்கியது. பேருந்து மற்றும் லாரியை அப்புறப்படுத்தி போலீஸார், ஒரு மணி நேரத்திற்கு பின் போக்குவரத்து சீர் செய்தனர். இந்த விபத்தில் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE