இணையதளத்தில் பழகிய பெண்ணுடன் டேட்டிங் சென்ற அமெரிக்க நகைச்சுவை நடிகர், மர்மக் கும்பலால் கடத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகர் தூய் ஜெர் ஜியாங். தனது தனிப்பட்ட வித்தியாசமான நடிப்புத் திறமையால் திரை உலகில் மிக சீக்கிரமே முன்னேறினார். இவருக்கென்று தனித்த ரசிகர் பட்டாளம் உள்ளது.
இந்த நிலையில் மினசோட்டாவில் வசித்து வந்த இவர் விடுமுறையை கழிப்பதற்காக கொலம்பியாவுக்கு சென்றிருந்தார். அங்கு மெடெல்லின் நகரில் விடுதியில் அவர் தங்கியிருந்தார்.
கடந்த டிச.10ம் தேதி சமூக ஊடகம் மூலம் சந்தித்த பெண்ணுடன் அவர் டேட்டிங் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த ஒரு குழுவினர் நடிகர் ஜியாங்கை தாக்கி கடத்திச்சென்றனர். அவரை மறைவான இடத்தில் கட்டி வைத்து ரூ.1.50லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இந்த நிலையில் டிச.11-ம் தேதி அவரை கத்தியால் சரமாரியாகக் குத்தி அங்குள்ள லா கோர்கோவாடோ பள்ளத்தாக்கு பகுதியில் தூக்கி வீசிவிட்டுச் சென்றுவிட்டனர்.
அவரிடமிருந்து தகவல் எதுவும் இல்லாத நிலையில் அவரது சகோதரர் எஹ் ஜியாங், இதுகுறித்து கொலம்பியா போலீஸாருக்கு புகார் அனுப்பினார். அவர்களின் விசாரணையில் கோர்கோவோடோ பள்ளத்தாக்கு பகுதியில் நடிகரின் உடல் கிடப்பது கண்டறியப்பட்டது. அவரது உடலை மீட்ட போலீஸார், நடிகர் ஜியாங் தங்கியிருந்த அறைக்கு சென்றபோது அங்கிருந்த ஒரு பெண் அவரது உடமைகளை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றது தெரிய வந்தது.
நடிகருடன் அறையில் தங்கி இருந்த அந்த பெண் யார்? கடத்தி கொலை செய்த கும்பலுக்கும் அவருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.