'அவளுடன் விஷம் குடித்து விட்டேன் அம்மா';போனில் கதறிய மகன்: காதலர்கள் பலியான சோகம்!

By காமதேனு

பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் இருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கலபுர்கியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கலபுர்கி

கர்நாடகா மாநிலம், கலபுர்கி மாவட்டம் சித்தாப்பூர் தாலுகாவைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ராதிகா என்பவரை கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தார். இதனால் காதலர்கள் இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்தனர். அவர்களின் காதலுக்கு இரண்டு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வாழ்வில் சேர முடியாத நிலையில் சாவிலாவது ஒன்று சேரலாம் என காதலர்கள் இருவரும் முடிவு செய்தனர்.

இதற்காக சௌகி தாண்டாவிற்கு சென்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அவர்கள் இருவரும் நேற்று இரவு அங்கு சென்றனர். அத்துடன் கையோடு கொண்டு சென்றிருந்த விஷத்தை இருவரும் குடித்தனர். இதன் பின் தான் ஆகாஷ்க்கு உயிர் பயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தனது தாயாருக்குப் போன் செய்து, காதலியோடு விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார். இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார்.

இந்த நிலையில் இருவர் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடப்பதைக் கண்ட அவ்வழியே சென்றவர்கள், உடனடியாக அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால் அவர்கள் இருவரும் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து வாடி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கலபுர்கி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE