திருப்போரூரில் குடியிருப்பு பாதுகாவலர் கொலை

By KU BUREAU

திருப்போரூர்: திருப்போரூரை அடுத்த காலவாக்கம் கிராமத்தில் ஓ.எம்.ஆர். சாலையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு வளாகத்தில் மூன்றுமாடி உள்ள கட்டிடம் ஒன்றை தனியார் பர்னிச்சர் நிறுவனம் வாடகைக்கு எடுத்தது. கடந்த 6 மாதங்களாக இந்த கட்டிடத்தில் உள்கட்டமைப்பு பணிகள் (இன்டீரியர்) நடைபெற்று வந்தன.

கடந்த மாதம் விற்பனைக்கான பர்னிச்சர்கள், சுவர் அலங்காரப் பொருட்கள் வந்திறங்கின. இவற்றை மூன்று தளங்களிலும் அழகுற அடுக்கி வைக்கும் பணிகள் பகல் நேரத்தில் மட்டும் நடைபெற்று வந்தது. 24 மணி நேரமும் இந்த வளாகத்தில் பாதுகாவலர்கள் 4 பேர் பணியில் இருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பணியில் இருந்த 4 பாதுகாவலர்கள் பணி முடிந்து வீட்டுக்கு சென்று விட்டனர். மாலை சுமார் 6 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம் காரியனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமர் (41) என்பவர் பணிக்கு வந்தார். இதே வளாகத்தின் மற்றொரு பகுதியில் பணியாற்ற மற்ற 3 நபர்களை செக்யூரிட்டி நிறுவனம் அனுப்பியது.

இந்நிலையில் நேற்று பகல் 12 மணி வரை பாதுகாவலர்கள் யாரும் வெளியே வரவில்லை. கடையின் உரிமையாளர்கள் பாதுகாவலர்களை தொடர்பு கொண்ட போது யாரும் போனை எடுக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த கடையின் மேற்பார்வையாலர் பூட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது இரண்டாவது மாடியில் பாதுகாவலர் ராமர் தலையில் இரும்பு ராடு மற்றும் பைப்பால் அடித்துக் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்தமேற்பார்வையாளர் திருப்போரூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

கொலை நடந்த இடத்தை செங்கல்பட்டு கூடுதல் எஸ்.பி. வேல்முருகன், மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி. ரவி அபிராம் ஆகியோர் பார்வையிட்டனர். இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வந்து சோதனையிட்டனர். பின்னர் கொலை செய்யப்பட்ட ராமரின் உடலை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் 2 பாதுகாவலர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ராமர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE