பாரா பாட்மிண்டன் வீரர் கொலை: இளம்பெண் உள்பட 2 பேர் கைது

By காமதேனு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பண விவகாரத்தில் பாரா பாட்மிண்டன் வீரரை கொலை செய்த இளம்பெண் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பாரா பாட்மிண்டன் வீரர் பிரசாந்த் குமார் சின்ஹா

ஜார்க்கண்ட் மாநிலம், ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள சட்வா பாலத்தின் கீழ் இருந்து பிளாஸ்டிக் சாக்கில் அடைக்கப்பட்ட ஒரு சடலத்தை போலீஸார் நேற்று மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் பிரசாந்த் குமார் சின்ஹா என்ற பாரா பாட்மிண்டன் வீரர் என்பது தெரியவந்தது.

இவர் ஜார்க்கண்ட் மாநிலம் சார்பில் பல்வேறு தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடி உள்ளார். மேலும், கடந்த ஆண்டு உகாண்டாவில் நடந்த பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியிலும் இந்தியா சார்பில் பங்கேற்று விளையாடியவர் ஆவார்.

இந்நிலையில் பிரசாந்த் குமார் சின்ஹாவுக்கு, கடந்த 2019ம் ஆண்டு முதல் அதே பகுதியைச் சேர்ந்த காஜல் சுமன் (28) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

போலீஸ் விசாரணை

இந்நிலையில், பிரசாந்த் குமார் சின்ஹாவுக்கும், காஜலுக்கும் இடையே பணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காஜல் தனது நண்பரான ரவுனக் குமார் (19) என்பவருடன் சேர்ந்து பிரசாந்த் குமார் சின்ஹாவை கொல்ல சதித்திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, சில நாள்களுக்கு முன்பு அவரை கொன்று, சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி சட்வா பாலத்தின் கீழ் வீசிவிட்டு சென்றுவிட்டனர். இந்நிலையில், பிரசாந்த் குமார் சின்ஹாவின் குடும்பத்தினர், அவரை காணவில்லை என போலீஸில் புகார் அளித்திருந்தனர்.

அதன்பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில் இந்த கொலை சம்பவம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இதையடுத்து காஜல் சுமன், ரவுனக் குமார் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். பண விவகாரத்தில் பாரா பாட்மிண்டன் வீரர் கொல்லப்பட்ட சம்பவம் ஜார்கண்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE