புதுச்சேரியில் சோகம்... துணைமின்நிலைய மதில் சுவர் இடிந்ததில் 3 பேர் பலி; 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்

By காமதேனு

புதுச்சேரியில் கழிவு நீர் கால்வாய் தூர்வாரும் பணியின்போது துணை மின் நிலைய மதில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

மீட்பு பணியில் போலீஸார், தீயணைப்பு வீரர்கள்

புதுச்சேரி மரப்பாலம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மரப்பாலத்திலிருந்து நைனார் மண்டபம் வழியாக வாய்க்கால் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று காலை, இங்குள்ள வசந்தநகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள துணை மின் நிலையத்தின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் 3 பேர் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழப்பு

இறந்தவர்கள் பாக்கியராஜ், பாலமுருகன், மற்றொரு பாலமுருகன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் திருவண்ணாமலை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இங்கு பணிக்கு அழைத்துவரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற தொழிலாளர்கள் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து புதுச்சேரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துணை மின் நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE