21 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஹாஸ்டல் வார்டனுக்கு மரண தண்டனை: போக்சோ நீதிமன்றம் அதிரடி

By KU BUREAU

கவுகாத்தி: அருணாச்சல பிரதேசத்தில் 2014 முதல் 2022 வரை அரசு நடத்தும் குடியிருப்புப் பள்ளியில் 21 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஹாஸ்டல் வார்டனுக்கு தூக்கு தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வார்டன் யும்கென் பக்ராவுக்கு தூக்கு தண்டனை விதித்த போக்சோ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஜாவெப்லு சாய், போக்சோ சட்டத்தின் கீழ் குற்றத்தை தூண்டியதற்காக முன்னாள் தலைமை ஆசிரியர் சிங்துங் யோர்பென் மற்றும் ஹிந்தி ஆசிரியை மார்போம் நகோம்டிர் ஆகியோருக்கும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். சில மாணவிகள் பாலியல் வன்கொடுமை குறித்து யோர்பெனிடம் புகார் அளித்தனர். ஆனால் பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்பதால் அமைதியாக இருக்கும்படி அவர் மாணவிகளை கேட்டுக் கொண்டார். தங்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து சில மாணவிகள் ஆசிரியை மார்போம் நகோம்டிரிடம் புகார் தெரிவித்தபோது, அவர் அதனை வெளியில் சொல்லாமல் இருந்ததால் அவருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது.

போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட 21 சிறுமிகளுக்காக ஆஜரான ஓயாம் பிங்கெப், "கடுமையான மற்றும் முன்மாதிரியான தண்டனையை வழங்கிய இந்த தீர்ப்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பாதிக்கப்பட்டவர் மரணமடையாத, கடுமையான ஊடுருவும் பாலியல் வன்கொடுமைக்காக போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு இந்தியாவில் வழங்கப்பட்ட முதல் மரண தண்டனை இதுவாகும்" என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில் ஒரு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரான தாஜுங் யோர்பென், பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் பிறழ் சாட்சியாக மாறியதால் விடுவிக்கப்பட்டார். அதேபோல கைது செய்யப்படுவதற்கு முன்பு விடுதி வார்டனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெர்டின் ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார்.

நவம்பர் 2022 இல், குடியிருப்புப் பள்ளியில் தனது 12 வயது இரட்டை மகள்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு நபர் வார்டன் யும்கென் பக்ரா மீது புகார் அளித்தபோது இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு 2014 மற்றும் 2022 க்கு இடைப்பட்ட காலத்தில் 6 முதல் 14 வயதுடைய 6 சிறுமிகள் உட்பட 21 பேரை பக்ரா பாலியல் வன்கொடுமை செய்ததாக கண்டறிந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE