மனைவியுடன் தகராறு; இரண்டு பெண் குழந்தைகளை கொலை செய்த கணவர் - தானும் தற்கொலைக்கு முயற்சி

By சுப.ஜனநாயகச்செல்வம்

மதுரை: மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தனது இரு பெண் குழந்தைகளையும் விஷம் கொடுத்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்த தந்தை, தானும் தற்கொலைக்கு முயன்று, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை யாகப்பா நகரில் பாலாஜி நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் சேதுபதி (35). பெயின்டரான இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ரக்சிதா, ரக்‌சனா என இரண்டு பெண் குழந்தைகள். இந்த நிலையில், கணவன் மனைவிக்கு இடையே கடந்த சில மாதங்களாகவே தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் சேதுபதியின் மனைவி ராஜேஸ்வரி கோபத்தில் சண்டைபோட்டுவிட்டு வெளியூரிலுள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அண்மையில் ராஜேஸ்வரி மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார். இதையடுத்து மீண்டும் இருவருக்கும் இடையில் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது இரண்டு மகள்களுக்கும் வாயில் விஷத்தை ஊற்றிய சேதுபதி, தானும் விஷத்தைக் குடித்துள்ளார். இதையடுத்து அரைகுறை மயக்கத்தில் இருந்த அவர், எக்காரணம் கொண்டும் குழந்தைகள் உயிர் பிழைத்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களது கழுத்தில் கத்தியால் குத்தியும், இரும்புக் கம்பியால் கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து தானும் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அப்போது மற்றொரு அறையிலிருந்த அவரது மனைவி ராஜேஸ்வரி சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்துவிட்டு கூச்சலிட்டுள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்குவந்து பார்த்துவிட்டு அதிர்ந்து போய் அண்ணாநகர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த அண்ணாநகர் போலீஸார், தற்கொலைக்கு முயன்று மயங்கிய நிலையிலிருந்த சேதுபதியை 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம், தொடர்பாக சேதுபதியின் மனைவி ராஜேஸ்வரியிடம் அண்ணாநகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், ராஜேஸ்வரி சில மாதங்களுக்கு முன்பு உசிலம்பட்டியைச் சேர்ந்த ஒருவருடன் நட்பாகி அவருடன் சென்றுள்ளார். இது தொடர்பாக சேதுபதி அண்ணாநகர் போலீஸில் புகாரளித்துள்ளார். இதையடுத்து போலீஸார் ராஜேஸ்வரியை மீட்டு சேதுபதியிடம் ஒப்படைத்தனர். இதன் தொடர்ச்சியாக நடந்த தகராறில் இச்சம்பவம் நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். எனினும் இதைத் தவிர இந்தக் கொலைகளுக்கு வேறேதும் காரணங்கள் உள்ளதா எனவும் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE